‛ஒன்றான 3 தலைவர்கள்’.. மன்மோகன் சிங் + ஹமீத் அன்சாரி + முரளி மனோகர் ஜோஷி! வீட்டிலேயே வாக்களிப்பு
டெல்லி: டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் வீட்டில் இருந்தே ஓட்டளித்தனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதனால் டெல்லியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் டெல்லியில் செல்வாக்கை மீட்டெடுக்கும் முனைப்பில் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன.
ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளன. இதனால் இருகட்சிகளும் டெல்லியில் கூட்டணி அமைத்து ஒன்றாக போட்டியிடுகின்றன. அதன்படி 7 தொகுதிகளில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 4 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிட்டுள்ளது.
அதன்படி சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி உள்ளிட்ட தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். பாஜக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.
இந்த 7 தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முனையும் அதேவேளையில் பாஜக 7 தொகுதிகளையும் தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதனால் 7 தொகுதிகளில் 6 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல் புதுமுகத்தை பாஜக களமிறக்கி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் மூத்த தலைவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறும் பணி இன்று தொடங்கியது. அதாவது 85 வயது மற்றும் அதனை தாண்டிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள டெல்லியில் 5,500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை இன்று முதல் பெற்று வருகின்றனர். அதன்படி இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே தேர்தலில் ஓட்டளித்தனர். அவர்களின் இடதுகையின் ஆள்காட்டி விரலில் தேர்தலில் ஓட்டளித்ததன் அடையாளமாக அழியா மை வைக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஓட்டளித்த மகிழ்ச்சியில் அழியா மை வைக்கப்பட்ட விரலை காட்டிய போட்டோக்கள் வெளியாகி தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications