ரூ.500 கோடி மோசடி .. ஆபாச படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் சிக்கியது.. வினோத மோசடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடன் செயலிகள் (லோன் ஆப்) என்ற பெயரில் ஆபாச புகைப்படங்கள் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பறித்து வந்த கும்பலை டெல்லி போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Recommended Video

    புதிய வகை ஆன்லைன் மோசடி.. Boss Scam!!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை

    இதுவரை அவர்கள் 500 கோடி ரூபாய் வரை இவ்வாறு மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமீபகாலமாக ஒரு மிகப்பெரிய சைபர் அச்சுறுத்தல் நிலவி வந்தது. அதாவது, துரிதமாக கடன் பெறும் வகையில் இணையதளத்தில் பல செயலிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மோசடி கும்பல்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். அவசரப் பணத் தேவை உள்ளவர்கள் இந்த செயலிகளை 'டவுன்லோட்' செய்த 5 நிமிடங்களில் அவர்களுக்கு தேவையான பணம் கிடைத்துவிடும். ஆனால் 20 ஆயிரத்துக்கு மேலே கடன் வழங்கப்படாது.

     Delhi Police Busted Scam Gang Used 100 Loan Apps To Extort Money

    மூன்று கட்ட மிரட்டல்

    அதே சமயத்தில், இந்த செயலிகளை டவுன்லோட் செய்யும் போதே, செல்போன்களில் இருக்கும் பிறரின் தொடர்பு எண்கள், புகைப்பட கேலரி ஆகியவற்றுக்குள் செல்ல அவை அனுமதி கேட்கும். இதற்கு அனுமதி அளித்தால் மட்டுமே கடன் கிடைக்கும். "இதை வைத்து என்ன செய்துவிட போகிறார்கள்" என நினைத்து பலரும் இதற்கு ஓகே கொடுத்து விடுவர். அதற்கு பிறகுதான் அந்த கும்பலின் ஆட்டம் ஆரம்பிக்கும்.

    கடன் கொடுக்கப்பட்ட ஒரு வாரத்துக்கு சம்பந்தப்பட்ட நபருக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அதற்கு பிறகு பிரைவேட் நம்பரில் இருந்து அவருக்கு அழைப்பு வரும். எடுத்து பேசினால், இந்தியில் மோசமான கெட்ட வார்த்தைகளால் ஒருவர் திட்டுவார். வாங்கிய கடனை விட அதிக தொகையை கேட்டு அவர் மிரட்டுவார். பெரும்பாலும் இந்தி மொழி அல்லாத மாநிலங்களைதான் இந்த கும்பல் குறிவைக்கும். இதனால் அவர் பேசுவது என்னவென்றே நமக்கு புரியாது. ஆனால் தொடர்ந்து இதுபோன்று பலர், கடன் பெற்ற நபரை தொடர்பு கொண்டு இந்தி கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வர். பணி செய்யும் இடத்தில் தொடர்ந்து இதுபோன்ற அழைப்புகள் வந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. இது அந்த நபருக்கு ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தும். இதுதான் முதல் கட்டம். இந்தக் கட்டத்திற்கே தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் அவர்கள் கேட்கும் பணத்தை அனுப்பி விடுவர்.

    அதற்கும் மசியாதவர்களுக்கு அந்த கும்பல் வேறு விதமான ட்ரீட்மெண்ட்டை கொடுக்க ஆரம்பிக்கும். சம்பந்தப்பட்டவரின் செல்போன் தொடர்பு எண்களை வைத்து ஒவ்வொருவருக்கும் அந்த கும்பல் 'கால்' செய்யும். மறுமுனையில் எடுப்பவர்களிடம் உங்கள் நண்பன் என சம்பந்தப்பட்டவரின் பெயரை சொல்லி, இவர் இவ்வளவு கடன் வாங்கி ஏமாற்றிவிட்டார். நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும் என அதே கெட்டவார்த்தையில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் திட்டுவார்கள். பெரும்பாலும் நமது உறவினர்களுக்கே அவர்கள் 'கால்' செய்வார்கள். இது சம்பந்தப்பட்டவருக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுக்கும். இந்த இரண்டாம் கட்டத்தில், பலர் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவார்கள்.

    இதற்கும் அசைந்து கொடுக்காதவர்களுக்குதான் மூன்றாம் கட்ட சிகிச்சை. அதன்படி, சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் இருக்கும் அவரது படம், அவரது நெருக்கமானவர்களின் படம் ஆகியவற்றை எடுத்து அவற்றை ஆபாசமாக மார்ஃபிங் செய்து தொடர்பு எண்ணில் உள்ளவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த கும்பல் அனுப்பும். இதனால் சம்பந்தப்பட் நபர் ஒருவித அச்ச மனநிலைக்குள் தள்ளப்படுவார். இதற்கு பயந்து பெரும்பாலானவர்கள் அந்த கும்பல் கேட்கும் தொகையை அனுப்பி விடுவார்கள். இதில் மானம் போய்விட்டதாக எண்ணி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலையும் செய்திருக்கிறார்கள்.

    வலை விரித்த டெல்லி போலீஸ்

    இதுதொடர்பான லட்சக்கணக்கான புகார்கள் பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் பிரிவுக்கு சென்றிருக்கின்றன. போலியான சிம் கார்டுகளை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி வந்ததால் அவர்களை கண்டுபிடிப்பது போலீஸாருக்கு சிரமமாக இருந்தது.

    இந்த சூழலில்தான், இந்த மோசடி கும்பல்களை பிடிக்க டெல்லி போலீஸின் சைபர் கிரைம் பிரிவு ரகசியமாக திட்டம் தீட்டியது. இதுபோன்ற நடவடிக்கைக்குள் இறங்கப் போகிறோம் என ஊடகங்களுக்கு சொல்லாமலேயே டெல்லி போலீஸார் காரியத்தில் இறங்கினர். அதன்படி, நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் எங்கிருந்து இதுபோன்ற அழைப்புகள் வருகின்றன என்பது குறித்து போலீஸார் ஆராயத் தொடங்கினர். அப்போது டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு நெட்வொர்க்கை போல அந்த கும்பல் செயல்படுவது தெரிந்தது. இதில் லக்னோ நகரில்தான் இந்த கும்பலின் தலைமை 'கால் சென்டர்' செயல்பட்டு வருவதை போலீஸார் தெரிந்து கொண்டனர்.

    இவ்வாறு இரண்டு மாதங்களாக அந்த கும்பலை கண்காணித்த போலீஸார், கடந்த வாரம் அதிரடியாக லக்னோ கால் சென்டருக்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த 5 பேர், போலீஸாரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களில் அந்த கும்பலின் தலைவன் தீபக் குமாரும் ஒருவன். அவர்கள் அளித்த தகலவின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் அந்த கும்பலைச் சேர்ந்த 17 பேர் கைது அடுத்தடுத்து செய்யப்பட்டனர்.

    500 கோடி வசூல்

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அதாவது, சீனாவைச் சேர்ந்த சிலர், இந்த கும்பலின் தலைவனான தீபக் குமாரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளனர். அவர்கள் கூறியதன் பேரிலேயே இந்த கும்பல் செயல்பட்டு வந்திருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் மூலமாக இந்த கும்பல் ஆயிரக்கணக்கானோரிடம் தங்கள் கைவரிசையை காட்டி பணம் பறித்திருக்கிறது.

    இவ்வறு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.500 கோடியை அந்த கும்பல் மோசடியாக வசூல் செய்திருக்கிறது. இந்த பணமானது நேரடியாக அன்னியச் செலாவணி மூலம் சீனாவில் உள்ள மோசடி பேர்வழிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றுவிடும். பின்னர் அவர்கள் மாதந்தோறும் ஒரு தொகையை சம்பளம் போல இங்குள்ளவர்களுக்கு செலுத்தி வந்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு ரூ.1 கோடி வரை இந்த கும்பல் அப்பாவி மக்களிடம் இருந்து பறித்திருக்கிறது.

    இவ்வாறு நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ஆட்களை நியமித்து, அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளமும் கொடுத்து இதுபோன்ற மிரட்டல் வேலையிலும், ஆபாசமாக மார்ஃபிங் செய்யும் வேலையிலும் அவர்கள் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள்.

    இந்நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யவும், மோசடியை நடத்திய சீனாவை சேர்ந்தவர்களை கைது செய்யும் முயற்சியிலும் டெல்லி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+