கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்த 'டூல்கிட்'..உருவாக்கியது இவர்களா? டெல்லி போலீஸ் ஷாக்.. கூகுளுக்கு கடிதம்
டெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்வீட் போட்டதை விட அவர் பகிர்ந்த 'டூல்கிட்' தான் டெல்லி போலீசை அதிர வைத்துள்ளது. இந்த டூல்கிட்டை உருவாக்கியவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பு உள்ளதா டெல்லி போலீஸ் சந்தேகிக்கிறது.
அந்த டூல்கிட்டை உருவாக்கியவர்கள் யார்? அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் யார் என்பது குறித்த தகவலை கேட்டு கூகுள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதி உள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேளாண் சட்டத்தை ரத்து செய்யாமல் சொந்த ஊருக்கு போக மாட்டோம் என்று கூறி மாதக்கணக்கில் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் குவிந்துள்ளனர்.

சட்டம் ரத்தே தீர்வு
மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. வேளாண் சட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தான் மிகமிக அதிக அளவில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

விவசாயிகள் பிடிவாதம்
போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளுக்கு, உணவு தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் விவசாய அமைப்பினரே கொடுத்து உதவி வருகிறார்கள். எத்தனை மாதம் ஆனாலும் வேளாண் சட்டத்தை ரத்து செய்யாமல் இங்கிருந்து செல்லாமாட்டோம் என்று பிடிவாதமாக உள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பஞ்சாப் விவசாயிகள்
இன்னொரு பக்கம் காலிஸ்தான் தீவிரவாதிகள் பஞ்சாப் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டத்தை மறைமுகமாக முன்னின்று நடத்துவதாக மத்திய அரசு சந்தேகத்தில் உள்ளார். அத்துடன் அவர்கள் பல்வேறு வெளிநாட்டு பிரபலங்களிடம் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதாகவும் மத்திய அரசு சந்தேகப்படுகிறது. மேலும் வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் நம்புகிறது.

வெளிநாட்டு சதி
மத்திய அரசு சந்தேகப்பட காரணங்கள் இல்லாமல் இல்லை. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டு ஒரு டூல்கிட், அரசின் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் என்ன ஹேஷ்டாக் உருவாக்க வேண்டும். எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும். வேளாண் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள், ஏன் அந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்,. போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என மிக நீண்ட விவரங்கள் அடங்கிய டூல்கிட்டை வெளிநாட்டில் உள்ளவர்கள் உருவாக்கி உள்ளனர்.

பகிர்ந்த டூல்கிட்
அந்த டூல்கிட்டை பகிர்ந்து தான் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்வீட் போட்டார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த டெல்லி போலீசார், கிரெட்டா துன்பெர்க் ட்விட்டரில் பகிர்ந்த சில நாட்களுக்குப் பிறகு, 'டூல்கிட்' ஆவணத்தை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். மின்னஞ்சல் ஐடிகள், URL கள் மற்றும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தகவல்கள் குறித்து மேலும் தெளிவு கோரி டெல்லி காவல்துறை கூகுள் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களை அணுகி உள்ளது.

டெல்லி துணை கமிஷ்னர்
டெல்லி துணை போலீஸ் கமிஷனர் (சைபர் செல்) அனீஷ் ராய் கூறும் போது, "இந்த ஆவணங்களை உருவாக்கி, 'டூல்கிட்டை' சமூக ஊடகங்களில் பதிவேற்றிய தனிநபர்கள் பற்றிய தகவல்களைப் பகிருமாறு கோரி கூகுள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "டூல்கிட்டில்" குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடிகள், டொமைன் URL கள் மற்றும் சில சமூக ஊடக கணக்குகள் பற்றிய விவரங்களை நாங்கள் தேடியுள்ளோம்" தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக யுத்தம்
உண்மையில், "இந்திய அரசுக்கு எதிராக சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார யுத்தத்தை" நடத்தியதற்காக 'டூல்கிட்' உருவாக்கியதாக "காலிஸ்தான் சார்பு" படைப்பாளர்களுக்கு எதிராக டெல்லி போலீஸ் சைபர் செல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. 'டூல்கிட்' ஆவணத்தை உருவாக்கியதன் பின்னணியில் காலிஸ்தானி சார்பு அமைப்பான 'போயடிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன்' அல்லது பி.எஃப்.ஜே இருக்கலாம் என டெல்லி போலீஸ் நம்புகிறது.

வெளியான வைரல் வீடியோ
ஏனெனில் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் பி.எஃப்.ஜே உறுப்பினர்களில் ஒருவர் உரையாற்றும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நடந்து வரும் விவசாயிகளின் கிளர்ச்சியைப் பற்றி அவர் ஆக்ரோசமாக பேசுகிறார். எனவே இதுபற்றி விசாரணையை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். டெல்லி துணை ஆணையர் அனீஷ் ராய் "சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என்று சந்தேகம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications