'Red Zone..' தீபாவளிக்கு முன்னரே இந்த நிலை என்றால் அடுத்து என்னவாகும்? மூச்சுமுட்டும் தலைநகர்
டெல்லி: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் 'மிக மோசம்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் காற்று மாசு தற்போது மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள காற்று மாசு காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாகத் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்கப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மிக மோசம்
தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டும் பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்க முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று காற்றின் தரம் இந்த ஆண்டு முதல்முறையாக மிக மோசம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதாலேயே தற்போது அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளால் டெல்லியில் பிஎம் 2.5 மாசு 6 சதவீதம் வரை ஏற்படுகிறது. ஆனால், உள்ளூர் காரணிகளாலேயே பெரும்பாலும் காற்று மாசு ஏற்படுகிறது.

தீபாவளிக்கு முன்பே
தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும், அதற்கு முன்னரே இப்போது காற்றின் மாசு மிக மோசம் என்ற நிலைக்குச் சென்றுள்ளது. டெல்லியில் கடந்த சனிக்கிழமை 268ஆக இருந்த காற்றின் தரம். ஞாயிற்றுக்கிழமை 289ஆக மோசமடைந்தது. திங்கள்கிழமை நிலைமை சற்று மேம்பட்ட போதிலும், இன்று காற்றின் தரம் 303 என்ற நிலைக்கு மோசமாகச் சரிந்துள்ளது. அண்டை நகரங்களான ஃபரிதாபாத் (306), காசியாபாத் (334), மற்றும் நொய்டாவிலும் (303) இதே நிலை தான். தீபாவளிக்குப் பின் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

தலைநகர் டெல்லி
டெல்லி கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு நிலைமை சற்று மேம்பட்டு. அதேபோல கடந்த அக்டோபரில் டெல்லியில் ஒரு நாள் கூட காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்குச் செல்லவில்லை. தலைநகரில் பெய்த கனமழை காற்று மாசு கையை விட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டது. இந்தச் சூழலில் தான் தற்போது காற்று மாசு மீண்டும் மிக மோசம் என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

காற்றின் தரம்
இந்தியாவில் காற்றின் தரம் பொதுவாக 5 நிலைகளின் பதிப்பிடப்படுகிறது. AQI எனப்படும் இந்த எண் அதிகமாக இருந்தால், காற்றின் தரம் மோசமாக உள்ளது என்றும் அது பொதுமக்களுக்கு ஆபத்தானது என்றும் அர்த்தம். AQI பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடையே இருந்தால் காற்றின் தரம் சிறப்பாக உள்ளதாகப் பொருள். இது 51 முதல் 100 வரை இருந்தால் திருப்திகரமானது. 101 மற்றும் 200 "மிதமானது" என்று அர்த்தம். அதேநேரம் AQI 201 முதல் 300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசம் என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் என்றும் பொருள். 401 முதல் 500 வரை AQI இருந்தால் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications