தண்டவாளத்தில் இறங்கி ரயிலில் ஏற முயன்ற பயணிகள்! டெல்லி நெரிசல்: நேரில் பார்த்தவர் சொன்ன திடுக் தகவல்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவிற்கு செல்ல ஒரே நேரத்தில் அதிக அளவில் திரண்டனர். நேற்று இரவு 9.15 மணியளவில் பயணிகள் ஒரே நேரத்தில் 13 மற்றும் 14 ஆகிய பிளாட்பார்ம்களில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், 11 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். கும்பமேளா சென்ற பயணிகள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு போலீஸ் கூட இல்லை
இந்த சம்பவம் பற்றி நேரில் பார்த்தவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:- மகாத் எக்ஸ்பிரஸ் ரயில் 15 வது நம்பர் பிளாட்பார்மில் வந்த போது பயணிகள் ரயிலில் ஏற முண்டியடித்தனர். ரயில்வே போதிய ஏற்படுகளை செய்யவில்லை. கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த நிலையிலும் ஒரு போலீஸ் கூட நிகழ்விடத்தில் இல்லை.
ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் வழியனுப்ப வந்தவர்களும் சிக்கிக் கொண்டனர்" என்றனர். ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வரும் ஒருவர் கூறுகையில், " ரயில் நிலையத்தின் 12, 13, 14, 15 ஆகிய நடைமேடைகளில் கடல் போல மக்கள் கூட்டம் இருந்தது. நடக்க கூட இடம் இல்லாத நிலை இருந்தது. நெரிசல் ஏற்பட்டதும் நாங்கள் உதவி செய்ய அங்கு ஓடினோம். கடுமையான குழப்பம் அங்கு நிலவியது.
தண்டவாளத்தில் இறங்கி ஏற முயற்சி
நெரிசலில் சிக்கி கீழே விழுந்த சிலரை நாங்கள் மீட்டோம். சில உடல்களையும் மீட்டோம். சிறிது நேரம் கழித்துதான் ரயில்வே அதிகாரிகள் அங்கு வந்தனர். அதன்பிறகு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது" என்றார். நெரிசலில் சிக்கி காயம் அடைந்த பயணி ஒருவர் கூறுகையில், "9 மணியளவில், திடீரென நெரிசல் ஏற்பட்டது. அங்கு ஒரு போலீஸ் கூட இல்லை. நிலமை மோசமாக இருந்தது.
ஒருவர் கூட உதவுவதற்கு இல்லை. நெரிசலில் சிக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அவர்களை மீட்க அங்கிருந்தவர்களே முயற்சி செய்தனர்" என்றார். மற்றொரு பெண் பயணி கூறுகையில், " நாங்கள் முன்பதிவு டிக்கெட் வைத்து இருந்தோம். ஆனாலும் ரயிலில் ஏற முடியவில்லை. சிலர் ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி ரயிலில் ஏற முயன்றனர்" என்றார்.
பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. பலத்த காயம் அடைந்தர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் சம்பவம் குறித்து தங்கள் வேதனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளித்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications