தாயின் நகையைத் திருடி காதலிக்கு ஐபோன்.. டெல்லியில் 9ம் வகுப்பு மாணவர் கைது
டெல்லி: டெல்லி, நஜாஃப்கார் பகுதியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக தனது தாயின் தங்க நகைகளைத் திருடி ஐபோன் வாங்கிய 9ம் வகுப்பு மாணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பணம் கொடுப்பதற்காகவும், ஐபோனை கிப்டாக கொடுப்பதற்காகவும் மாணவர் நகைகளைத் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் நஜாஃப்கர் என்ற பகுதியில் தனது வீட்டில் இருந்த தங்க செயின்கள், கம்மல் மற்றும் மோதிரம் காணாமல் போனதாக 9 ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரவை போலீஸார் சோதனை செய்துள்ளனர். ஆனால், சந்தேகப்படும்படியான வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வந்து செல்லாதது தெரியவந்தது.
எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், இச்சம்பவம் நடந்ததில் இருந்து அப்பெண்ணின் மகன் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவரின் பள்ளி நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவன் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் வாங்கியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, போலீஸார் கூறுகையில், தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகளை காணவில்லை என ஆகஸ்ட் 3 ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இப்பிரச்னை குறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்பட்டன. ஆனால், அதில் சந்தேகத்திற்கிடமான எந்த நபர்களின் செயல்களும் தென்படவில்லை. இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள்தான் யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்கள் என அறிந்து எங்களது குழு தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது. இச்சம்பவம் நடைபெற்ற தினத்தில் இருந்து அப்பெண்ணின் மகனைக் காணவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தொடர்ந்து மாணவரைத் தேடி வந்த நிலையில் ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதி மாணவர் தனது வீட்டுக்கு வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். மாலை 6.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த மாணவர் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டார். விசாரணையில், மாணவர் தனது காதலிக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்காக தனது தாயின் தங்க காதணி, மோதிரம், செயினை கக்ரோலா பகுதியில் உள்ள தங்கநகை வியாபாரிகள் இருவரிடம் விற்பனை செய்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 40 வயதான கமர்வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளியில் படித்து வரும் இந்த மாணவரது தந்தை உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். படிப்பில் எந்த ஆர்வமும் இல்லாமல் குறைந்த மதிப்பெண்களையே மாணவர் பெற்று வந்துள்ளார். தனது காதலியை சர்ப்ரைஸ் செய்வதற்காக தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க தாய் மறுத்துவிட்ட நிலையில், கோபமடைந்த மாணவர் தனது தாயின் நகைகளைத் திருடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications