டேஞ்சர் ஜோனில் டெல்லி.. மாசு குறைந்தும் பிரயோஜனமில்லை!.. சுத்தமில்லாத காற்றை சுவாசிக்க முடியலையே!
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு இன்றும் மிக தீவிரமாக இருப்பதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்று காற்றின் தரம் 400க்கும் அதிகமாக பதிவாகியிருந்த நிலையில் இன்று 356ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த காற்று மக்கள் சுவாசிக்க ஏற்க தக்கதல்ல என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்கதாக அல்லாத காற்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் டெல்லியில் கடந்த வாரம் முழுவதும் 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியிருந்தது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க BS3 மற்றும் BS4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சாலையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை 50% குறைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், பதிவெண் அடிப்படையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை என வாகனங்கள் இயங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பான வழக்கில், இந்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன இயக்கம் என்பது காற்று மாசை குறைக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் பயிர் கழிவுகளை எரிக்க தடையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தர குறியீட்டில் 400ஐ தாண்டி பதிவாகியிருந்த காற்று மாசு இன்று 356 என குறைந்திருக்கிறது.
இருப்பினும் 50-100 என இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்ற காற்று என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காற்று மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி 11ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 11ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் டெல்லியில் உள்ள காற்று மாசு தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது.
காற்று மாசு காரணமாக சுமார் 2 கோடி மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 50% பேரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் இதற்கடுத்த நாட்களில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications