ஜனநாயகம் முதல் குஜராத் கலவரம் வரை.. பள்ளி பாடங்களில் என்சிஇஆர்டி நீக்கியது என்னென்ன?
டெல்லி: 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) கொண்டு வந்துள்ளது. ஜனநாயகம், முகலாய மன்னர்கள் ஆட்சி, குஜராத் கலவரம் உள்ளிட்ட பகுதிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் 1961-ம் ஆண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு தான் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கல்விக் கொள்கை, பாடத் திட்டங்கள் சார்ந்து ஆலோசனை வழங்கும் பணிகளை செய்து வருகிறது. அத்துடன் காலத்திற்கு ஏற்றார் போல், அறிவியல் வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை கருத்திக் கொண்டு கல்வி தொடர்பான மேம்பாட்டுத்திட்டங்களை செய்து வருகிறது

என்சிஆர்டி குழு, 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் பல்வேறு பகுதிகளை நீக்கி உள்ளது. ஜனநாயகம், முகலாய ஆட்சி, குஜராத் கலவரம், இந்திய ஏற்றத்தாழ்வு, வறுமை உள்ளிட்ட சில பகுதிகளைபுதிதாக நீக்கி உள்ளது.
6-ம் வகுப்பில் ஜனநாயகம், காலநிலை மாற்றம், கானுயிர் பாதுகாப்பு, உணவு உள்ளிட்டவை குறித்த பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளன. 7-ம் வகுப்பு பாடங்களிலிருந்து இந்திய ஏற்றத்தாழ்வு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளன.
11-ம் வகுப்பு பாடங்களிலிருந்து ஏழ்மை, அமைதி உள்ளிட்ட பகுதிகளும், 12-ம் வகுப்பு பாடங்களிலிருந்து குஜராத் கலவரம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பனிப்போர், இனப்பெருக்கச் செயல்பாடு உள்ளிட்ட பகுதிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12 ஆம் வகுப்பு வரலாற்று புத்தகங்களில் இருந்து முகலாய பேரரசு பற்றிய பாடத்தை நீக்கியது. மேலும் சர்ச்சைக்குரிய மேலும் பல மாற்றங்களை செய்தது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் புத்தகத்தை 'Themes of Indian history' (இந்திய வரலாற்றின் கருப்பொருட்கள்) என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக வெளியிட்டது. அதன் இரண்டாம் பகுதியில்."மன்னர்கள் மற்றும் வரலாறு, முகல் தர்பார்" என்ற 9வது அத்தியாயம் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது. இதேபோல் காந்தி படுகொலையில் நாதுராம் கோட்சேவின் பங்கு போன்ற சில குறிப்பிட்ட பகுதிகள் நீக்கப்பட்டன.
இதனிடையே மத்தியில் உள்ள பாஜக அரசு உள்நோக்கத்துடன் பாடத்திட்டங்களை நீக்குவதாக சில கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் விமர்ச்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
அதேநேரம் கொரோனாகாரணமாக பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டதால், பள்ளிப் பாடத்திட்டங்களை எளிமையாக்கும் நோக்கில் சில பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications