கண்டு கொள்ளாத காங்கிரஸ்.. "இந்தியா" கூட்டணியால் கரைந்து போகும் ஆம் ஆத்மி? இது புதுசா இருக்கே
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள போதிலும் பெரும்பாலான தொகுதிகளில் என்டிஏ கூட்டணியே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் பாஜக கூட்டணியே இந்த முறையும் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றே பெரும்பாலான சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி எக்ஸிட் போல்: தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதில் கிட்டதட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணியே வெல்லும் என்றே எக்சிட் போல் சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. 6-7 இடங்களில் அங்கு பாஜக வெல்ல வாய்ப்புள்ளதாகவே பெரும்பாலான எக்ஸிட் போல் சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் பாஜகவின் வாக்கு சதவீதம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது பாஜக வெற்றியைத் தடுக்காது என்றே இந்தியா டுடே சர்வே கூறியிருக்கிறது. தலைநகர் டெல்லியில் பாஜக 54 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், 6-7 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் இந்தியா டுடே கூறியுள்ளது.
கடந்த தேர்தல்: கடந்த 2019 லோக்சபா தேர்தலில், டெல்லியில் பாஜகவிடம் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. லோக்சபா தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளுக்கே மக்கள் அதிகம் வாக்களித்தனர். இதனால் இரண்டு தேசிய கட்சிகளுக்கு இடையிலான இந்த போரில் ஆம் ஆத்மியாலும் வெல்ல முடியவில்லை. அந்தத் தேர்தலில் டெல்லியில் பாஜக சுமார் 56 சதவீதம், காங்கிரஸ் 22 சதவிகித வாக்குகளைப் பெற்றன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத வெற்றியைப் பெற்ற ஆம் ஆத்மியால் லோக்சபா தேர்தலில் 18 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. குறிப்பாக 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது.
இந்த முறை பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணியாகக் களமிறங்கியுள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் பாஜக வெற்றியைத் தடுக்க முடியும் என்றே அக்கட்சி தொண்டர்கள் கருதினர். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் பெரிய ஷாக்காவே இருக்கிறது.
இந்தியா கூட்டணி: குறிப்பாக வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை பாஜக 54 சதவீத வாக்குகளைப் பெறும் என இந்தியா டுடே கூறியுள்ளது. அதேநேரம் ஆம் ஆத்மி 25 சதவீதம் மற்றும் காங்கிரஸ் 19 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியைத் தவிர, வேறு எங்கும் இந்தியா கூட்டணி வெல்வது போலத் தெரியவில்லை என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
காரணம் என்ன: டெல்லியில் பிரச்சாரம் தொடங்கி நாள் முதல் வாக்குப்பதிவு நடந்த மே 25ஆம் தேதி வரை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் களத்தில் இருந்த தொகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் பெரியளவில் வேலை பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரச்சாரம் தொடங்கி பூத் நிர்வாகிகள் வரை பெரியளவில் இரு கட்சிகளிடையே இணக்கம் ஏற்படவில்லை.
சிக்கல்தான்: ஆம் ஆத்மியை பொறுத்தவரை டெல்லியில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரியக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தன. ஆனால், கடந்த காலங்களில் நேர் எதிர் துருவத்தில் இருந்து அரசியல் செய்தவர்கள் இப்போது திடீரென ஒன்றிணைந்தது, அது தொண்டர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
மேலும், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தின. ஆம் ஆத்மி போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. ராகுல் காந்தி முதல் மல்லிகார்ஜுன் கார்கே வரை காங்கிரஸ் டாப் தலைவர்கள் டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்யவில்லை. இதுவே ஆம் ஆத்மி தோல்விக்குக் காரணம் என்கிறது இந்தியா டுடே சர்வே. இது எந்தளவுக்கு உண்மையாகிறது என்பதை நாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications