சாதனை படைத்த 2023 தீபாவளி.. ரூ.3.5 லட்சம் கோடி வர்த்தகம்! சீனாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பாம்
டெல்லி: தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டி வர்த்தம் சென்றுள்ளதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு, ஆடைகள், உணவு பொருட்கள் விற்பனை களை கட்டத்தொடங்கியது. இதுதொடர்பாக சிஏஐடி எனப்படும் அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு நாடு முழுவதும் உள்ள 30 முக்கிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது. அந்த வகையில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை பன்மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது.

இது குறித்து சிஏஐடி வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் தீபாவளியை முன்னிட்டு சுமார் 65 கோடிக்கும் அதிகமான மக்கள் பொருட்களை வாங்கி இருக்கிறார்கள். குறிப்பாக பட்டாசுகள், இனிப்பு வகைகள், புத்தாடைகள், மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள், தங்கம், வெள்ளி ஆபரண பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், புதிய வாகனங்கள், பரிசு பொருட்கள், மின்னணு சாதனங்கள், அழகு சாதன பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
மேலும் உணவகங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகளிலும் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்தது. இதனை ஒட்டி நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. தீபாவளி காரணமாக ஜவுளி விற்பனை 12 சதவீதம், தங்க நகைகள் விற்பனை 9 சதவீதம் அதிகரித்து உள்ளது. மளிகை பொருட்கள், உணவு தானியங்கள் விற்பனை 13 சதவீதமும், உலர் பழங்கள் விற்பனை 4 சதவீதமும் உயர்ந்து உள்ளது. பரிசுb பொருட்கள் விற்பனை 8 சதவீதமும் அழகுசாதன பொருட்கள் விற்பனை 6 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை 3 சதவீதமும், மின்னணு சாதனங்கள் விற்பனை 8 சதவீதம் வரை உயர்ந்து இருக்கின்றன.

அதேபோல், ஆட்டோ மொபைல் துறையை எடுத்துக்கொண்டால் சுமார் 20 சதவீதம் அளவு வாகனங்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு நபருக்கு சராசரியாக ரூ.5500 என்ற வீதம் மக்கள் செலவு செய்கிறார்கள். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என்ற தொடர் பிரச்சாரம் காரணமாக சீன தயாரிப்புகளுக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இந்திய வணிகர்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இதனால் ரூ.1 லட்சம் கோடி வரை சீனாவுக்கு இழப்பு ஏற்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications