விடுவதாக இல்லை டி.கே.சிவகுமார்.. ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை.. தடதடக்கும் டெல்லி
டெல்லி: கர்நாடகா அரசியலில் டிகே சிவகுமார் எனும் ஒற்றை மனிதர் எடுக்கப் போகும் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. டெல்லியில் தமது ஆதரவாளர்களுடன் டிகே சிவகுமார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவில் 135 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் பதவிக்கு சித்தராமையாதான் தேர்வு செய்யப்படுவார் என தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. காங்கிரஸ் மேலிடமும் இந்த முடிவில்தான் இருந்து வந்தது. ஆனால் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான டிகே சிவகுமார், முதல்வர் பதவியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதே இப்போதைய நிலை.

கர்நாடகா அரசியல் களம்தான் டெல்லியில் இப்போது பேசுபொருள். டெல்லியில் இன்று காலை முதலே காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கர்நாடகா தலைவர்களுடன் இடைவிடாமல் ஆலோசனை நடத்தினர். ராகுல் காந்தியுடன் டிகே சிவகுமார், சித்தராமையா சந்தித்து பேசினர். ஒரு கட்டத்தில் சித்தராமையா முதல்வராவது முடிவாகிவிட்டது; அறிவிப்பு வரப்போகிறது என தகவல்கள் பரவின. இதனை நம்பி பெங்களூருவில் சித்தராமையா வீடு முன்பாக பட்டாசு வெடித்து கொண்டாடினர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒரு முடிவு எடுக்க விடமாட்டார் டிகே சிவகுமார் என்பதுதான் டெல்லி தகவலாக இருந்தது.
டெல்லியில் தமது சகோதரரும் எம்பியுமான டிகே சுரேஷ் இல்லத்தில் தமது ஆதரவாளர்களுடம் தீவிர ஆலோசனை நடத்துகிறார் டிகே சிவகுமார். காங்கிரஸ் மேலிடம் முன்வைக்கும் நிபந்தனைகளை அப்படியே ஏற்று ஒப்புக் கொள்வதா? அல்லது தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்து தொடர்ந்து வாதிடுவதா? அப்படி செய்வதால் ஏற்படும் சாதக பாதக அம்சங்கள் என்ன? என்பவை தொடர்பாக டிகே சிவகுமாரின் ஆலோசனைகள் தொடருகின்றன.












Click it and Unblock the Notifications