மீண்டும் ‘இந்தியா' கூட்டணியில் கைகோர்த்த திமுக.. SIR-க்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்
டெல்லி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் உள்பட பிற தேர்தல் சார்ந்த நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு இன்று கடிதம் எழுதினர். இந்த கடிதத்தில் 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகிய திமுக, ஆம்ஆத்மி கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளனர். இதன்மூலம் இருகட்சிகளும் மீண்டும் 'இந்தியா' கூட்டணியுடன் கைகோர்த்துள்ளன. இது பாஜகவுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்பட 20க்கும் அதிகமான கட்சிகள் கூட்டணி வைத்தன. இந்த கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் இந்த கூட்டணிகள் தோல்வியடைந்தன.

இதையடுத்து 'இந்தியா' கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டன. ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறின. இந்த வரிசையில் சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுகவும் வெளியேறியது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி முதல்வர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியில் சேர்ந்து 2 அமைச்சர் பதவிகளை பெற்றது. திமுக தலைமையிடம் சொல்லாமல் காங்கிரஸ் தவெக கூட்டணிக்கு சென்றதாக திமுகவினர் விமர்சனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 8 ம் தேதி 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்கிரஸ் மீதான அதிருப்தியால் திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தான் தற்போது 'இந்தியா' கூட்டணியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது திமுக. அதாவது SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது கர்நாடகா உள்பட பிற மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் தேர்தல் சார்ந்த பிற பிரச்சனைகள் பற்றி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதினர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையின் பொறுப்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''கடந்த 8 ம் தேதி 'இந்தியா' ஜன்பந்தன் மீட்டிங் நடந்தது. இதில் 21 கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை பங்கேற்றார். இந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 'சார்' நடவடிக்கை மற்றும் பிற தேர்தல் பிரச்சனைகள் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத முடிவெடுக்கப்பட்டது. இப்போது 23 கட்சிகள் + ஒரு சுயேச்சை ஆதரவில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்க்க்கட்சிகள் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கையில் உறுதியாக உள்ளன'' என்று கூறியுள்ளார்.
கடந்த 8 ம் தேதி நடந்த 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் 21 கட்சிகள் + ஒரு சுயேச்சை பங்கேற்ற நிலையில் இந்த கடிதத்தில் 23 கட்சிகள் + ஒரு சுயேச்சை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அந்த 2 புதிய கட்சிகள் யார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அந்த 2 கட்சிகளின் பெயர்கள் ஆம்ஆத்மி, திமுக.
இந்த 2 கட்சிகளும் கடந்த 8 ம்தேதி மீட்டிங்கை புறக்கணித்த நிலையில் அந்த கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளன. இதனை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி டெரிக் ஓ பிரைன் உறுதி செய்துள்ளது. ''இந்தியா கூட்டணி நன்றாக செல்கிறது. ஆமாம், ஆம்ஆத்மி மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது'' என கூறியுள்ளார். இதன்மூலம் 'இந்தியா' கூட்டணி கட்சிகளும் மீண்டும் ஆம்ஆத்மி, திமுக கட்சிகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications