டெல்லியில் எதிரொலிக்கும் விழுப்புரம் வெள்ளம்.. திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல்!
டெல்லி: ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. மழை பாதிப்புகளை மதிப்பிட ஒன்றிய குழுவை அனுப்ப தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளது குறித்தும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் துவங்கி, அன்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலேயே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவில் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

விழுப்புரம் மாவட்டம் முழுக்க மயிலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 49.29 செ.மீ மழை பெய்துள்ளது. வீடூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே நிலைகொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியும், புயல் பாதிப்புகள் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரியும் மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தாக்கல் செய்துள்ள ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், மழை பாதிப்புகளை மதிப்பிட ஒன்றிய குழுவை அனுப்ப தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, மணிப்பூர் தொடர் கலவரம் விவகாரம் குறித்து விவாதம்கோரி திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி. மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் எம்.பி மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications