என்ன பேசினாலும் புரியாது- எதுக்கு புரியாம பேசுற? லோக்சபாவில் பாஜகவினரை தமிழில் தெறிக்கவிட்ட கனிமொழி!
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி பேசுவதற்கு முன்னதாகவே பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். தாம் பேசுவதற்கு முன்பே கூச்சலிட்ட பாஜகவினருக்கு தமிழிலேயே பதிலடி கொடுத்தார் கனிமொழி.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. லோக்சபாவில் நேற்று சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது இன்று லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் முதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் அந்த மசோதா இது இல்லை என சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் நிஷிகாந்த் துபே பேசினார்.
பாஜக திடீர் முழக்கம்: இன்றைய விவாதத்தில் 3-வதாக திமுக எம்.பி. கனிமொழி பேச அழைக்கப்பட்டார். அப்போது "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். கனிமொழி அருகே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே அமர்ந்திருந்தார். கனிமொழி கையில் குறிப்புகளுடன் எழுந்து "Thank you sir" என்று சொல்லிதான் முடித்தார். அப்போது திடீரெனா பாஜக தரப்பில் இருந்து எம்.பிக்கள் கூச்சல் எழுப்பினர். சிலர் முழக்கங்களை எழுப்பினர்.
கனிமொழியின் கோபம்: இதனால் திமுக, என்சிபி எம்.பிக்கள் கோபமடைந்தனர். தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, அப்படி என்ன அவசரம் அவங்களுக்கு? என கேள்வி கேட்டார். கனிமொழி எம்.பி.யும் What is this Sir? என சபாநாயகர் ஓம் பிர்லாவை பார்த்து கேட்டார். அவருக்கு ஆதரவாக சுப்ரியா சுலேவும் கேள்வி எழுப்பினார்.

தமிழில் தெறிக்கவிட்ட கனிமொழி: நின்று கொண்டே இருந்த கனிமொழி முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் பாஜகவினரை நோக்கி கண்டனம் தெரிவித்தார். பாஜகவினரைப் பார்த்து, " நீங்க என்ன பேசுனாலும் புரியாது.. நீ என்ன பேசுற? என எகிறியபடி தமிழிலேயே பதிலடி கொடுத்தார் கனிமொழி. ஆனாலும் பாஜகவினரின் கூச்சல் குழப்பம் அடங்கவில்லை.
வரிந்து கட்டிய சுப்ரியா சுலே: உடனே எழுந்த சுப்ரியா சுலே, என்ன சார் இது? பேச ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள்ளாகவா? என கொந்தளித்தார். இதுதான் பெண்களுக்கு தரக் கூடிய மரியாதையா? எனவும் நறுக் கேள்வி கேட்டார் சுப்ரியா சுலே. கனிமொழி மீண்டும் அவங்க என்ன பேசுறாங்கன்னு எங்களுக்கு புரியவே இல்லை என ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.

ஆவேசப்பட்ட தயாநிதி மாறன்: அப்போது ஆவேசமாக எழுந்த தயாநிதி மாறன், இதுதான் பெண்களை பாஜக மதிக்கிற லட்சணமா? என கொந்தளித்தார். அத்துடன் "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் ஷேம்! ஷேம்! எனவும் கனிமொழிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். இந்த அமளியை சிறிது நேரம் அமைதியாக சபாநாயகர் ஓம் பிர்லா பார்த்து கொண்டிருந்தார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்து முழக்கமிட்டவர்களை அமரச் சொன்னார். இதன் பின்னரே கனிமொழி பேச தொடங்கினார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: கனிமொழி எம்பி தமது பேச்சில் நீதிக்கட்சி பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த வரலாறு, முதல் பெண் எம்.எல்.ஏ. முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் தேவதாசி முறையை ஒழித்தது தொடங்கி மகளிர் விடுதலையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை விவரித்தார். தற்போதைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வைத்து பாஜக அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய கனிமொழி எம்.பி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பையும் பதிவு செய்தார். அப்போது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என அழுத்தம் திருத்தமாக முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டார் கனிமொழி.












Click it and Unblock the Notifications