57 இஞ்ச்.. மணிப்பூர் கொடூரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை கடுமையாக சாடிய திமுக எம்பி அப்துல்லா
டெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததை சுட்டிக்காட்டிய திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், மெய்தி சமூகத்தினர், குகி பழங்குடி பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்து கும்பலாக பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் மணிப்பூர் வன்முறை சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி பேட்டியளித்த பிரதமர் மோடி, "மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. என் இதயம் வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள். மணிப்பூர் மகள்களுக்கு நடந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது." என்றார்.
இந்த நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் திமுக எம்பி எம்.எம். அப்துல்லா, "நாடாளுமன்றத்தில் இன்று; இன்றைக்கு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கியது.. முதல் நாளான இன்று விதி எண் 267 இன் கீழ் "மணிப்பூர் விசயம் குறித்து விவாதிப்பதற்காக அவையின் பிற நடவடிக்கைகள் அத்தனையும் ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தோம்.
அதே போல ஆளுங்கட்சியான பாஜக மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க விதி எண் 167 இன் கீழ் "குறைந்த கால அளவு விவாதத்திற்கு'' கோரிக்கை வைத்தது.. அதாவது எதிர்கட்சிகள் கேட்பது விதி எண் 267 இன் கீழ்.. அப்படியானால் "அரசிற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் பிரதமர் அவைக்கு வந்து கடந்த 80 நாட்களுக்கும் மேல் மணிப்பூரில் என்னவெல்லாம் நடக்கிறது?

என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?'' என்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே அதன் மீதான விவாதம் துவங்கும். 167 இன் கீழ் குறைந்த கால விவாதம் என்றால் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டும் விவாதத்திற்காக ஒதுக்கப்படும். அப்போது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். அரசு தரப்பில் கேட்டு மட்டும் கொள்வார்கள். வேறு ஒன்றும் இருக்காது.
எனவே இதற்கு இந்தியா அணியினர் ஒத்துக் கொள்ளாமல் பிரதமர் அவைக்கு வர வேண்டும் என்பதையே முன் வைத்து தொடர் குரல் எழுப்பினோம். அவைத் தலைவர் ஒத்துக் கொள்ளாது அவையை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார். நாட்டில் ஒரு மாநிலம் பற்றி எரியும் போது அவைக்கு வந்து பேச பயப்படும் ஒரு பிரதமர்.. அவருக்கு 57 இஞ்ச் மார்பு!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications