சிறுபிள்ளை போல நடந்து கொள்கிறார்.. ஆளுநர் ரவி உடனே ராஜினாமா செய்யணும்! டிஆர் பாலு தாக்கு
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் சிறுபிள்ளை போல நடந்து கொள்கிறார் எனக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக எம்பி டிஆர் பாலு, பதவிக் காலம் முடிந்த பிறகும் தமிழ்நாடு ஆளுநர் பதவியில் தொடர்கிறார் என்றும் ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி கலைஞர் பல்கலைக்கழகம் கும்பகோணத்தில் அமைக்கப்படும் என அறிவித்தார். இது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுவரை அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இந்த மசோதாவை அவர் குடியரசுத் தலைவரிடம் அனுப்பிய நிலையில், அங்கேயே அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கடிதம்
இதற்கிடையே இது தொடர்பாகக் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. கலைஞர் பல்கலைக்கழக மசோதா, விளையாட்டு பல்கலைக்கழக மசோதா இரண்டையும் ஆளுநருக்குத் திருப்பி அனுப்ப வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் செயலாளரிடம் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிகள் நேரில் வழங்கி வழங்கினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஆர் பாலு, "கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அன்று கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்தார். இது தொடர்பான மசோதா தமிழ்நாடு சட்டசபையில் ஏப்ரல் 29ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதலுக்காக கவர்னர் மாளிகை அனுப்பப்பட்டது. இருப்பினும், அந்த மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.
ஒப்புதல் கிடைக்கவில்லை
மேலும் கவர்னர் கையெழுத்து போடுவதற்குப் பதிலாகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் கிடையாது. கவர்னர் இதை இதற்கு அனுமதி கொடுத்திருந்தால் இந்நேரம் பல்கலைக்கழகம் உருவாகி இருக்கும். இந்தப் பல்கலைக்கழகத்திற்காக கும்பகோணத்துக்குப் பக்கத்திலே திப்பிராஜபுரம் என்ற பகுதியில் 54 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படவில்லை.
இது தொடர்பாகவே ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், இப்போது வரை அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
மசோதாக்களின் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதைக் குடியரசுத் தலைவர் கேட்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தே பார்க்க முடியும். மாநில அரசும் அதைப் பொறுத்தே இயங்க முடியும். இந்த விவகாரத்தில் நாங்கள் கவர்னரையே குற்றஞ்சாட்டுகிறோம். அவர் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கிறார்.
சிறுபிள்ளை போல
ஏதோ சிறுபிள்ளை போலச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். உயர் பதவியில் இருக்கும் அவர், தன்னுடைய கடமையைச் சரியான நேரத்தில் செய்வதை விட்டுவிட்டு தேவையற்ற முறையிலே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். மிக பெரிய கல்வி நிறுவனம் வருவதைத் தடுத்து நிறுத்தவே இதுபோல செய்துள்ளனர்.
சட்டப்படி இந்த மசோதாவுக்கு ஒன்று மசோதாவுக்கு தர வேண்டும். இல்லையென்றால் காரணத்தைச் சொல்லித் திருப்பி அனுப்ப வேண்டும். இரண்டையும் செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள். வேண்டும் என்றே இதுபோல செய்கிறார்கள். தனக்கு எதிராக இருக்கும் அரசு செயல்படக்கூடாது என்பதற்காக இதுபோல செய்கிறார்கள்.
ராஜினாமா செய்யுங்க
தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாகப் பல முறை நாடாளுமன்றத்திலேயே பேசி இருக்கிறோம். இந்த கவர்னருக்கு எதுவுமே தெரியாது. அரசியல் சட்டம் என்றாலே அவருக்குத் தெரியாமல் இருக்கிறது. கவர்னரின் பதவிக்காலம் எப்போதோ முடிந்துவிட்டது. ஆனாலும், தொடர்ந்து பதவியில் இருக்கிறார். அவரே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications