கிறிஸ்தவ NGOக்களை குறிவைக்கும் மத்திய அரசு? நிதி ஆதாரம் முடக்கம்! அமித்ஷாவுக்கு எம்பி வில்சன் கடிதம்
டெல்லி: வெளிநாட்டு நிதியுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் FCRA எனும் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது கிறிஸ்தவ மற்றும் தேவாலய அடிப்படையிலான அமைப்புகளின் FCRA உரிமங்கள் கண்மூடித்தனமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், அமித்ஷாவுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.
அரசு சாரா அமைப்புகளான என்ஜிஓ-க்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி நன்கொடை பெறுவதற்கு, கடந்த 2010ம் ஆண்டு முதல் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ், உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமம் வைத்திருந்தால் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற முடியும். மட்டுமல்லாது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் நிதி சரியான வழியில் செலவிடப்படுகிறதா? அரசுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்து மத்திய உள்துறை அமைச்சகம் FCRA உரிமத்தை வழங்கும்.

ஆனால் கடந்த 2014க்கு பிறகு, அதாவது பாஜக மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு வெளிநாட்டு நிதி உதவியுடன் செயல்படும் என்ஜிஓ அமைப்புகளை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இப்படி இருக்கையில் கடந்த ஆண்டு மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நியூஸ் கிளிக் செய்தி ஊடகம் மீது சிபிஐ விசாரணை நடைபெற்றதும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பட்டியலிட்டு வந்த ஆக்ஸ்பாம் நிறுவனம் மீது சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரைத்ததும் அனைவரும் அறிந்ததே. இவை FCRA விதிகளை மீறியதாக கூறிதான் நடந்திருந்தன.
ஆக இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த FCRA விவகாரத்தில் தற்போது மற்றொரு சர்ச்சை வெடித்திருக்கிறது. அதாவது சமீபத்தில் 2500 மத அடிப்படையிலான என்ஜிஓக்களின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 1600 கிறிஸ்தவ மற்றும் தேவாலய அடிப்படையிலான அமைப்புகள் என்பதுதான் இதில் பஞ்சாயத்தை ஏற்படுத்தியது. பாஜகவின் நிர்வாகிகள் பலரும் கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் நிலையில், இந்த ரத்து விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மறுசீரமைக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.
அதில், "உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2500க்கும் மேற்பட்ட மத அடிப்படையிலான என்ஜிஓ-க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1600 கிறிஸ்தவ மற்றும் தேவாலய அடிப்படையிலான அமைப்புகளாகும். இந்த ரத்து, வேண்டுமென்றே சிறுபான்மை மத அடிப்படையில் இயங்கும் என்ஜிஓ-க்களை குறிவைத்ததை போல இருக்கிறது. எனவே இது போன்று உரிமங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010 மற்றும் அதன் விதிகளை சர்வதேச தரத்துடன் சீரமைத்து அவற்றை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். இப்படி செய்வது, நமது தேசம் போற்றும் ஜனநாயக கொள்கைகளை நிலைநிறுத்தும். மட்டுமல்லாது நமது சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு அரசு சாரா நிறுவனங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் பாதுகாக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications