இன்னும் 12 வருஷம்தான்.. இந்திய மக்கள் தொகை எவ்வளவு இருக்கும்? கருவுருதல் விகிதம் குறைந்துள்ளதா?
டெல்லி: 2036 ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகை எவ்வளவு எண்ணிக்கையை எட்டும் என்றும், இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்தும் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2023 இல் பெண்கள் மற்றும் ஆண்கள் என்ற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் கடந்த 2011ஆம் ஆண்டு பெண்கள் விகிதம் 48.5 சதவீதமாக இருந்த நிலையில் 2036 ஆம் ஆண்டு சற்று அதிகரித்து 48.8 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கருவுறுதல் விகிதங்கள் தொடர்ந்து சரிவடைந்து வருவதால் 2011 முதல் 2036 ஆம் ஆண்டு வரை 15 வயதுக்கு உட்பட்ட தனிநபர்களின் விகிதம் குறையும் என கூறப்படுகிறது. இதற்கு அப்படியே எதிர்மாறாக 2011 முதல் 2036 ஆம் ஆண்டு வரை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் மக்கள் விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2036 ஆம் ஆண்டில் பெண்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 2011 இல் ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், இந்த விகிதம் மாறி ஆயிரம் ஆண்களுக்கு 952 பெண்கள் என்ற நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. பாலின சமத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் பாலின சமத்துவத்தில் இது பாசிட்டிவான விசயமாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களின் நிலை, மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு போன்றவை குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தைக் கணக்கிடுவதில் பாலின தரவுகள் மிகப்பெரும் பங்காற்றுகின்றன. இதில், வயது வாரியான கருவுறுதல் விகிதம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 முதல் 2020 வரை 20 முதல் 24 மற்றும் 25 முதல் 29 வயதிலானோரின் கருவுறுதல் விகிதம் 135.4 மற்றும் 166 இல் இருந்து 113.6 மற்றும் 139.6 ஆக சரிவடைந்தது. ஆனாலும், 35 முதல் 39 வயதினருக்கு இடையேயான கருவுறுதல் விகிதமும் இதே காலகட்டத்தில் 32.7 இல் இருந்து 35.6 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இளம்பருவத்திலேயே கருவுறுதல் விகிதமும் குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை 2036 ஆம் ஆண்டில் 152.2 கோடியாக அதிகரிக்கலாம் என்றும், அப்போது பெண்கள் விகிதம் அதிகரித்து 48.8 சதவீதமாக இருக்கும். 2011 இல் பெண்கள் விகிதம் 48.5 சதவீதமாக இருந்தது. மேலும், கருவுறுதல் விகிதம் குறையும் என்றும், மூத்த மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரிக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications