பாக்டீரியாக்கள்.. "மனிதர்களின் உடல்நலத்திற்கு கோமியம் உகந்ததல்ல:" இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
டெல்லி: கோமியம் மனிதர்கள் குடிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் ஏற்படும் என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில் இது குறித்த முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பசுக்களின் கோமியத்தைக் குடிப்பது நல்லது என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இருப்பினும் இதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஒரு சான்றும் இல்லை என்று இதனால் மோசமான ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதில் எந்தவொரு தெளிவும் இதுவரை இல்லாமலேயே இருந்து வந்தது. இந்தச் சூழலில் IVRI எனப்படும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் பசுக்களின் கோமியம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது
குடிக்க வேண்டாம்: மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்றும் இதனால் அவை மனித நுகர்வுக்கு ஏற்றது இல்லை என்றும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IVRI) ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பசுக்களிடம் ஒரு வகை பாக்டீரியாக்களும் எருமையில் பாக்டீரியாக்களும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. போஜ் ராஜ் சிங் தலைமையிலான மாணவர்கள் குழு இந்த விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர்.
பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாகக் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் Escherichia coli உள்ளிட்ட கடுமையாகப் பாக்டீரியாக்களும் இதில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஆன்லைன் ஆராய்ச்சி இணையதளமான ரிசர்ச்கேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
ஏன் ஆபத்து: தொற்றுநோயியல் துறையின் தலைவர் போஜ் ராஜ் சிங் கூறுகையில், "பசு, எருமைகளிடம் இருந்து மொத்தம் 73 சிறுநீர் மாதிரிகளை எடுத்து நாங்கள் சோதனை செய்தோம். அதேநேரம் பசுவுடன் ஒப்பிடுகையில் எருமையின் சிறுநீரில் ஆன்டிபாக்டீரியாக்கள் இருக்கிறது. எருமை சிறுநீரில் S Epidermidis, E Rhapontici இருப்பதால் அது சற்று குறைவான வீரியம் கொண்டதாக இருக்கிறது.

நமது ஊரில் இருக்கும் பால் பண்ணைகளில் இருந்து சாஹிவால், தார்பார்கர் மற்றும் விந்தவானி ஆகிய மூன்று வகையான மாடுகளின் சிறுநீர் மாதிரிகளைச் சேகரித்தோம். அதேபோல எருமைகள் சிறுநீர் மாதிரிகளைச் சேகரித்தோம். இந்த ஆய்வை நாங்கள் ஜூன் மற்றும் நவம்பர் 2022 காலகட்டத்தில் செய்தோம்.
அதில் சிறுநீர் மாதிரிகளில் கணிசமான விகிதத்தில் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். மாடுகளிடம் இருந்து எடுக்கப்படும் சிறுநீரில் மிகச் சிறியளவில் நன்மை இருந்தாலும் கூட அவை பாக்டீரியா பாதிப்பைத் தடுக்கும் என்று பொதுமைப்படுத்த முடியாது. எனவே, எந்தவொரு சூழலிலும் மாடுகளின் சிறுநீரை மனித நுகர்வுக்குப் பரிந்துரைக்க முடியாது.
கூடுதல் ஆய்வு: காய்ச்சி வடிகட்டிய சிறுநீரில் தொற்று பாக்டீரியாக்கள் இருக்காது என்று சிலர் கூறுகிறார்கள். இது குறித்த ஆய்வை தான் இப்போது நாங்கள் செய்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். ஆய்வாளர்கள் இப்படி எச்சரித்துள்ள போதிலும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) முத்திரையே இல்லாமல் பசுவின் சிறுநீர் இந்தியச் சந்தையில் பரவலாக விற்கப்படுகிறது.
அதேநேரம் IVRI அமைப்பின் முன்னாள் இயக்குநர், ஆர்எஸ் சவுகான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த ஆய்வை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கூறுகையில், "நான் 25 ஆண்டுகளாகப் பசுவின் சிறுநீரை ஆராய்ச்சி செய்து வருகிறேன், காய்ச்சி வடிகட்டிய மாட்டுச் சிறுநீர் மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் மற்றும் கொரோனாவுக்கு எதிராக உதவுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
இந்த குறிப்பிட்ட ஆராய்ச்சி காய்ச்சி வடிகட்டிய சிறுநீர் மாதிரிகளை வைத்து ஆய்வு செய்யவில்லை. உண்மையில் அதைத்தான் மக்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications