உங்களுக்கு பிடிக்கலன்னா வாங்காதீங்க... அதுக்காக! டிரம்ப் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை டிரம்ப் விதித்து இருக்க கூடிய நிலையில், அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு பணியாமல் இந்தியா, ரஷ்யாவிடம் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இதற்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நியாயப்படுத்தி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் வர்த்தக உறவை கடைப்பிடிக்க வேண்டாம் எனக் கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் இந்தியா, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தொடர்ந்து உக்ரைனுடன் சண்டை போட மறைமுகமாக உதவி செய்கிறது என்பதே டிரம்பின் குற்றச்சாட்டு. ஆனால், இந்தியாவை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு, அமெரிக்காவே சில கனிமங்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதாகவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதாகவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அதே நேரத்தில், இந்தியா போலவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யும் சீனாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படவில்லை. இது குறித்து அமெரிக்காவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டது" என அமெரிக்கா பதிலளித்துள்ளது.
நீங்கள் வாங்க வேண்டாம்
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அமெரிக்காவிற்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் கூறியதாவது:-
"அமெரிக்காவுக்கு சாதகமான வணிக நிர்வாகத்தில் இருந்து கொண்டு, மற்றவர்கள் வர்த்தகம் செய்வதை குற்றம் சாட்டுவது கேலிக்குரியதாக உள்ளது. இந்தியாவில் இருந்து எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், நீங்கள் வாங்க வேண்டாம். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதில் உள்நாட்டு நலனும் சர்வதேச நலனும் இரண்டுமே உள்ளது.
அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது
எண்ணெய் விலை நிலையானதாக இருக்க இது உதவுகிறது. இந்தியா தனது நலனுக்கான முடிவுகளை சுதந்திரமாக எடுக்கும்." மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்றும், சில விஷயங்களில் சுமூக உடன்பாடு எட்ட முடியாத சிக்கல்கள் இருப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
அதாவது, இந்தியாவின் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை பாதிக்கக்கூடிய சில அம்சங்கள் உள்ளன. இதில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். அமெரிக்கா வைக்கும் சில கோரிக்கைகள், நமது ஊரக பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியவையாக இருக்கின்றன. அமெரிக்காவின் பால், கோழி மற்றும் சோளம், சோயாபீன்ஸ், கோதுமை, எத்தனால், பழங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற விவசாயப் பொருட்களுக்கு சந்தைகளைத் திறக்குமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
"சிக்கலான விஷயங்கள்"
குறிப்பாக, அமெரிக்காவின் சோயாபீன்ஸ் மற்றும் சோளம் மரபணு மாற்றப்பட்டவை. இது இந்தியர்களின் சுகாதாரத்திற்கே ஆபத்தானது என்பதால், இந்தியா இவை போன்ற மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி மறுக்கிறது. அதேபோல, பால் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதித்தால், இந்தியாவில் கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்தியா மறுப்பு தெரிவிக்கிறது. இதுபோன்ற அம்சங்களையே, "சிக்கலான விஷயங்கள்" என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications