என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.. இளைஞர்களுக்கு ஆதரவாக நில்லுங்கள்.. ராகுல் காந்தி வேண்டுகோள்..!
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் இளைஞர்களுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நிற்க வேண்டும் என்றும், தனது பிறந்தநாளை முன்னிட்டு எந்தவித கொண்டாட்டத்திலும் கட்சியினர் ஈடுபட வேண்டாம் எனவும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பீஹார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தரப்பில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தரப்பில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக அக்னிபாத் திட்டம் பற்றி பேசியுள்ள ராகுல் காந்தி, ஜிஎஸ்டி-யை வணிகர்கள் எதிர்த்தனர். வேளாண் சட்டத்தை விவசாயிகள் எதிர்த்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார வல்லுநர்கள் எதிர்த்தனர். அதுபோல் இப்போது அக்னிபாத் திட்டத்தை இளைஞர்கள் எதிர்க்கின்றனர். இந்திய மக்களுக்கு என்ன தேவை என்பதை பிரதமர் எப்போதும் புரிந்து கொள்வதில்லை. ஏனென்றால் அவருடைய நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் அவர் கேட்பதில்லை என விமர்சித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் என்று முன்பே கூறியிருந்தேன். அதேபோல் மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. தற்போது இளைஞர்களுக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலை உருவாகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களிடம் இரண்டாவது முறையாக மன்னிப்பு கேட்பார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் 52வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்திய இளைஞர்கள் வேதனையில் உள்ளனர். இந்த நேரத்தில் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் நிற்க வேண்டும்.
எனது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் யாரும் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து 3 நாட்களாக விசாரணைக்கு ஆஜரானார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications