வெட்கக்கேடு.. காஷ்மீர் சம்பவத்தில் உங்களுக்கு பங்கு இல்லையா.. பாக் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேசம்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? திடீரென உங்கள் (பாகிஸ்தான் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது ஏன்? ஏனென்றால், நன்கு யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும் - நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனரீயா கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக தற்போது இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக கடந்த சில ஆண்டுகளாக மாறி இருந்து வருகிறது.உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

மினி சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் , மலைப் பாங்கான பள்ளத்தாக்கு மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய ஊராகும். பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய இடம் ஆகும். இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமான இங்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றார்கள்.
பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்து சென்றனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர் நேற்று வந்தது.. காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதலில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 27 பேர் பலியாகினர். இதில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகான புல்வெளி அமைதியை இழந்து நிசப்தமாக மாறிவிட்டது. காஷ்மீரில் சுற்றுலா சென்ற பயணிகள் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறினார்கள். கடந்த 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக பஹல்காம் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு, அண்மைக்காலமாகவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தார்கள். மெல்ல மெல்ல நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எண்ணத்தை பயங்கரவாதிகள் அழிக்க வேண்டும் என்று நினைத்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனரீயா வெளியிட்ட பதிவில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? திடீரென உங்கள் (பாகிஸ்தான் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது ஏன்? ஏனென்றால், நான்கு யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும் - நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications