லட்சத்தீவுக்கு அடித்த லக்! இந்தியர்கள் தேசப்பற்று இருக்கே செம! மாலத்தீவு பிரச்னையால் இப்படியொரு நன்மை
டெல்லி: இந்தியாவில் இரண்டாவது நாளாக லட்சத்தீவுகள் தான் டிரெண்டிங்கில் உள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதற்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
மாலத்தீவு- இது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு.. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 6 லட்சம் தான். அதாவது சென்னை மக்கள் தொகையைக் காட்டிலும் பல மடங்கு குறைவு.

என்ன தான் இவ்வளவு சின்ன நாடாக இருந்தாலும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள நிலையில், புவிசார் அரசியலில் அது ரொம்பவே முக்கியமான இடத்தை பெறுகிறது. இதன் காரணமாகவே இந்தியா மாலத்தீவில் தொடர்ந்து பல முதலீடுகளைச் செய்து வருகிறது.
மாலத்தீவு: இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவிலும் திருமணமான இளசுகள் அதிகம் விரும்பி சுற்றுலா செல்லும் இடம் என்றால் அதுவும் மாலத்தீவு தான். ஹனி மூனுக்கு பெயர்போன மாலத்தீவு சுற்றுலாத் துறையே அதிகம் முழுமையாக இருக்கும் நாடு.. அதிலும் மாலத்தீவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் தான் அதிகம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியச் சுற்றுலாப் பயணிகளையே மாலத்தீவு அதிகம் நம்பி இருக்கிறது.

இப்படி இந்தியாவை அதிகம் நம்பி இருக்கும் மாலத்தீவில் அமைச்சராக உள்ளவர்கள் நமது பிரதமர் மோடி குறித்துக் கூறிய கருத்துகள் தான் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சென்று அங்கே எடுத்த போட்டோக்களை பகிர்ந்து இருந்தார். லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், அங்கே சுற்றுலாவை விளம்பரப்படுத்தும் வகையிலேயே பிரதமர் மோடியின் போட்டோக்கள் இருந்தது.
பிரதமர் மோடி குறித்து அவதூறு: உடனடியாக மாலத்தீவைச் சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளையும் இந்தியாவுக்கு எதிரான இனவெறி கருத்துகளையும் கூற ஆரம்பித்தனர். இதுவே அனைத்து சர்ச்சைகளுக்கும் ஆரம்பம். ஆனால், ஏதோ ஒரு சிலர் இதுபோல சொல்வது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், அந்நாட்டின் கலைத்துறை துணை அமைச்சரே இந்தியப் பிரதமர் மோடி மிக மோசமான கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக இஸ்ரேலின் கைப்பாவை என்றெல்லாம் பிரதமர் மோடியைச் சாடினார்.
அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி மோசமான கருத்துகளைக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. அவருடன் வேறு இரு அமைச்சர்களும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டனர். இதற்கு இந்தியர்கள் சரியான பதிலடியைக் கொடுக்க ஆரம்பித்தனர். பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார் தொடங்கி பலரும் கண்டித்தனர். மேலும், இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை கேன்சல் செய்தனர்.
கேன்சல்: ஒரே நாளில் சுமார் 10,500 ஹோட்டல் புக்கிங், 5,200 விமான டிக்கெட்களும் கேன்சல் ஆகியுள்ளது. சுற்றுலாவையே முழுமையாக நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு இது மிகப் பெரிய அடியாகப் பார்க்கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறிய மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த பஞ்சாயத்துக்கு நடுவே தான் லட்சத்தீவுக்கு லக் அடித்துள்ளது.
லட்சத்தீவுக்கு லக்: மாலத்தீவுக்கு எதிராக BoycottMaldives என்ற ஹேஸ்டேக் டிரெண்டான நிலையில், இந்தியர்கள் பலரும் சுற்றுலா செல்ல லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த இரண்டு நாட்களாக லட்சத்தீவு என்ற வார்த்தை கூகுள் டிரெண்டிங்கில் இருக்கிறது. நேற்று மட்டும் லட்சத்தீவு என்ற வார்த்தை 5 லட்சம் பேர் தேடிய நிலையில், இன்றும் கூகுள் டிரெண்டிங்கில் லட்சத்தீவு இடம் பிடித்துள்ளது.
லட்சத்தீவு என்ற வார்த்தை மட்டுமின்றி, லட்சத்தீவு டூர், லட்சத்தீவு பேக்கேஜ், டெல்லி டூ லட்சத்தீவு, லட்சத்தீவு எத்தனை தொலைவில் உள்ளது என லட்சத்தீவு சார்ந்து பல வார்த்தைகள் டிரெண்டிங்கில் இருக்கிறது. மேலும், இந்தியர்கள் பலரும் லட்சத்தீவுக்கு செல்லவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கே புக்கிங்களும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சை கருத்துகளால் இப்படி லட்சத்தீவுக்கு லக் அடித்துள்ளது.












Click it and Unblock the Notifications