காலையிலேயே அதிர்ச்சி.. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானின் வீட்டில் அமலாக்க துறை அதிரடி ரெய்டு!
டெல்லி: பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமனத்துல்லா கானின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது

இதன் காரணமாகவே தங்களைப் பழிவாங்கும் நோக்கில் விசாரணை முகமைகளை மத்திய அரசு தங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூட டெல்லி மது கொள்கை விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ளார்.
ரெய்டு: இதற்கிடையே இப்போது மற்றொரு ஆம் ஆத்மி தலைவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அமனத்துல்லா கானின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பண மோசடி வழக்கில் அமனத்துல்லா கானின் டெல்லி இல்லத்தில் இப்போது அதிகாரிகள் சோதனை நடத்துவதாகக் கூறப்படுகிறது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை இந்த ரெய்டை நடத்துகிறது.
டெல்லியில் உள்ள ஊழல் தடுப்பு துறை தாக்கல் செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமனத்துல்லா கானுக்கு எதிராக அமலாக்கத் துறை பண மோசடி விசாரணையைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அமனத்துல்லா கான் தலைவராக இருக்கும் டெல்லி வக்ஃப் வாரியத்தில் முறைகேடாக நியமனங்கள் நடந்ததாகவும் இதில் ஊழல் நடந்ததாகவும் எழுந்த புகாரே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
யார் இவர்: டெல்லியில் ஓக்லா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானவர் அமனதுல்லா கான். 49 வயதான இவர், டெல்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராக உள்ளார். அங்கு நடந்த சில நியமனங்களில் முறைகேடு நடந்ததாக இவரை கடந்தாண்டே லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இருப்பினும், கொஞ்சக் காலத்திலேயே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது அவரது டெல்லி இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது.












Click it and Unblock the Notifications