அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. பணமோசடி வழக்கில் அதிரடி
டெல்லி: நம் நாட்டின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில்ல் இன்று திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அனில் அம்பானிக்கு சொந்தமான டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்த சோதனை தொடர்ந்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது உடன் பிறந்த சகோதரர் தான் அனில் அம்பானி. இவர் ரிலையன்ஸ் குரூப் தலைவராக இருந்தார். மேலும் ஏராளமான தொழில்களை செய்து வந்தார். இவர் தனது தொழிலில் கடும் நஷ்டம் அடைந்தவர். அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன.

குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி செலுத்ததாது, கடன் வாங்கி முறைகேடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அனில் அம்பானி மீது உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ சார்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
50 நிறுவனங்களில் சோதனை
இந்நிலையில் தான் இன்று அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி, மும்பையில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள், அதன் துணை நிறுவனங்கள் என்று 35க்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தம் 50 நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பையில் உள்ள அவரது தனிப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை.
25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
அதுமட்டுமின்றி 25க்கும் மேற்பட்டவர்களை பிடித்து அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த திடீர் சோதனையின் பின்னணி என்பது அனில் அம்பானி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பின்னணி என்ன?
அதாவதுRAAGA எனும் (ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமம்) நிறுவனங்களால் பணமோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் பொதுவான நிதியை அவர் தனது துணை நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதன் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனை என்பது நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனில் அம்பானி குறித்து தேசிய வீட்டுவசதி வங்கி, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA), பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல ஒழுங்குமுறை மற்றும் நிதி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், சிபிஐ பதிவு செய்த முதல் 2 வழக்குகளில் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யெஸ் வங்கி விவகாரம்
அதேபோல் கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை யெஸ் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அதனை அனில் அம்பானி பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதோடு இதுபற்றி விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க யெஸ் வங்கியில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் உள்ளது. இதுபற்றியும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்பிஐ சொன்ன வார்த்தை
சமீபத்தில் எஸ்பிஐ எனும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அனில் அம்பானியை மோசடியாளர் என்று பட்டியலிட்டது. வங்கியில் வாங்கிய கடனை அவர் திரும்ப செலுத்தாமல் இருப்பதாக எஸ்பிஐ தரப்பில் புகார் முன்வைக்கப்பட்டது. மேலும் சிபிஐயிடம் புகார் அளிக்க எஸ்பிஐ தயாராகி வருகிறது. இப்படியான சூழலில் தான் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது அனில் அம்பானிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications