இபிஎஸ்-க்கு ஆதரவாக பெறப்பட்ட கையெழுத்து.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு.. அடுத்தது என்ன?
டெல்லி: சுய விருப்பத்துடனும், முழு மனதுடனும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்ததாக 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு சமர்ப்பித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்த நிலையில், பெரும்பாலான தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் ஆதரவோடு அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியின் நிரந்தர பொது செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகளையும் அவர் மும்முறமாக செய்து வருகிறார். இன்னும் 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு
இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம்
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியது, நிரந்தர பொதுச் செயலாளர் தேர்தலுக்கான விதிகளில் மாற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக இது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் தற்போது இந்த தீர்மானங்கள் குறித்து பரிசீலனையில் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆதரவு கடிதங்கள்
இதை அடுத்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்ததாகவும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த முடிவினை விரைவில் அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் ஒரு மனதான ஒப்புதல் இன்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கட்டாயப்படுத்தி சில நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.

இபிஎஸ் முக்கிய நடவடிக்கை
இந்த நிலையில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாகவும், முழு ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாணப் பத்திரத்தில் இபிஎஸ் தரப்பினர் கையெழுத்து வாங்கினர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக 2,500 பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணி தீவிரமாகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக எம்பி சிவி சண்முகம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளார். இந்த நடவடிக்கை ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முக்கிய சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications