"சார் ஓபிஎஸ்".. சாரி வணக்கம்னு டெல்லி பேட்டியை கையெடுத்து கும்பிட்டபடியே முடித்த எடப்பாடி பழனிசாமி
டெல்லி: டெல்லியில் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு சாரி வணக்கம் என கூறி பேட்டியை முடித்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அமித்ஷாவுடன் 20 நிமிடங்கள் பேசிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சந்திப்பு எதற்கான சந்திப்பு என்பதை விளக்கிக் கொண்டிருந்தார்.

மத்திய அமைச்சர்
அவர் கூறுகையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. நடந்தாய் வாழி காவிரி, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவரும் செய்வதாக உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் எல்லா துறைகளிலும் கமிஷன் கரெப்ஷன் நடைபெறுகிறது.

நியாயம் இல்லை
எந்த துறையும் நியாயமாக நடக்கவில்லை. அரசியல் பேசவில்லை. பிரதமரை சந்திக்கவும் திட்டமில்லை. அதிமுக பொதுக் குழு வழக்கானது நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்து சொல்ல இயலாது. ஓபிஎஸ் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அவருக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் சொல்கிறார் என்றால் அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

மின் கட்டணம்
என்னை பொருத்தவரை நானும் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். திண்டுக்கல், காங்கேயம், தருமபுரி, ஈரோடு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி என 20 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழகத்தில் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணமானது 12 சதவீதம் முதல் 52 சதவீதம் உயர்த்தியுள்ளது என கூறிய எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை தெரிவித்தார்.

சாரி வணக்கம்
அப்போது 11 ஆம் தேதி ஓபிஎஸ்... என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, சாரி வணக்கம் என கையெடுத்து கும்பிட்டு பேட்டியை முடித்துக் கொண்டார். அதிமுகவில் ஒற்றை தலைமையை டெல்லி தலைமை விரும்பவில்லை என்றும் டெல்லி தலைமையின் முழு ஆதரவும் ஓபிஎஸ்ஸுக்கே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications