இரட்டை இலை எங்களுக்கே.. தேர்தல் ஆணைய கதவை தட்டும் எடப்பாடி.. அதிரடி பாதை.. ஆஹா.. இவ்வளவு வேகமா!
டெல்லி: அதிமுகவின் சின்னம் மற்றும் அதன் பெயரை பயன்படுத்தும் உரிமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக எடப்பாடி தரப்பு அணியினர் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார்.
எதிர் தரப்பில் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது.

சின்னம் முடங்கும்
அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணையாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.

தேர்தல் ஆணையம்
இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வழக்கு தீர்ப்பு
இந்த வழக்கில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வாதம் முடிந்துவிட்டது. கடந்த வாரம் இந்த வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்களையும் இரண்டு தரப்பும் தாக்கல் செய்துவிட்டது. தற்போது வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தாலும், இரட்டை இலை சின்னம் வழக்கில் வெற்றிபெறும் தரப்பிற்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம்தான் ஒதுக்க வேண்டும். இதில் இந்திய தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். தீர்ப்பு யாருக்கு ஆதரவாக வந்தாலும் கூட தேர்தல் ஆணையம் அந்த நபரின் தரப்பிற்கு ஆதரவாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிரச்சனை
முக்கியமாக தேர்தல் நேரத்தில் பிரச்சனை வேண்டாம் என்று சின்னத்தை முடக்கிவிட்டு, தேர்தலுக்கு பின் முடிவு எடுக்கவே வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் லீகல் அணியை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். 25ம் தேதி இவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நேரம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் சின்னம் மற்றும் அதன் பெயரை பயன்படுத்தும் உரிமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை முறையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கும்படி எடப்பாடி தரப்பு அணுக உள்ளதாம். இன்று அல்லது நாளை நீதிபதி தினேஷ் மகேஸ்வரியை சந்தித்து இந்த கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைக்க உள்ளதாம். வழக்கில் தீர்ப்பு வந்தால் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வசதியாக இருக்கும் என்று இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வைக்க உள்ளதாம். ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணைய தரப்பை சந்திக்க எந்த கோரிக்கையும் இதுவரை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications