எடப்பாடிக்கு ராஜமரியாதை.. மோடி அருகே சீட், போட்டோஷூட்! NDA கூட்டத்தில் அதிமுகவுக்கு முக்கியத்துவம் ஏன்?
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டு மோடிக்கு அருகிலேயே அவருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? விரிவாக பார்ப்போம்.
2024 லோக் சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

மறுபக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிவு செய்து வேறுபாடுகளை மறந்து ஓரே கூட்டணியாக போட்டியிட முடிவு செய்து இருக்கின்றன. இதற்காக கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், நேற்றும், இன்றும் பெங்களூருவில் 2 முறை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இன்றைய கூட்டத்தில் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டு உள்ளது.
அதே சமயம் இன்று தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள், மாநில சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணி வைத்த கட்சிகள், பிளவுபட்ட கட்சிகளுடைய ஒரு பிரிவின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், ஐஜேகே, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்டவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 38 கட்சிகள் பங்கேற்கும் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்த நிலையில், ஒரு எம்பி கூட இல்லாத பல கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்று உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்த கூட்டத்தில் மண்டல வாரியாக பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டோ ஷூட் மற்றும் கூட்டத்திலும் பிரதமர் மோடிக்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆபரேசன் சவுத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் ஆட்சியை இழந்தது. மறுபக்கம் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுகவுக்கு பாஜகவுக்கும் இடையே மோதல் போக்குகள் தொடர்ந்து வரும் நிலையில் அக்கட்சியை தொடர்ந்து கூட்டணியில் தக்க வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கலாம்.












Click it and Unblock the Notifications