உத்தவ் தாக்கரேவுக்கு பெரியஅடி.. சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கிய தேர்தல் ஆணையம்
சிவசேனா கட்சி மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.
டெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. இதில் யார் உண்மையான சிவசேனா என்பதில் பெரிய பிரச்சனை நடந்தது. இந்நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் சிவசனேவின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு கடந்த 2019ல் சட்டசபை தேர்தல் நடந்தது. 288 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 145 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் தான் அந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2019 தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா 55 இடங்களில் ஜெயித்தது. இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க போதிய இடங்கள் இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது
அதாவது இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை சிவசேனா கேட்டதற்கு பாஜக மறுத்ததால் தேர்தல் கூட்டணி முறிந்தது. இதையடுத்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் அமைந்த இந்த கூட்டணி ஆட்சிக்கு 169 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டு ஆட்சி நடந்தது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனாவின் 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது.

முதல்வரான ஷிண்டே
மேலும் ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாஜகவுடன் கைகோர்த்தனர். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியில் 40க்கும் அதிகமானவர்கள் இருந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். பாஜகவின் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
இதையடுத்து சிவசேனா கட்சியினர் இரு அணியாக செயல்பட தொடங்கினர். உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டனர். இதில் எம்பி, எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது உத்தவ் தாக்கரேவை விட ஏக்நாத் ஷிண்டேவுக்கு தான் அதிகம் இருந்தது. இந்நிலையில் தான் உண்மையான சிவசேனா நாங்கள் தான் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.

தேர்தல் ஆணையம் உத்தரவு
இதில் விசாரணை நடந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது உண்மையான சிவசேனா என்பது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் என அங்கீகரித்தது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பெரிய வெற்றியாகும். மாறாக உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications