நான் பெத்த மகன் பெயர் "சேகர்.." இந்தியா உடனான கனெக்ஷன் குறித்து எலான் மஸ்க் சொன்ன அடடே மேட்டர்
டெல்லி: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தனது குடும்பம் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தனது பார்ட்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனச் சொன்ன எலான் மஸ்க், தங்கள் மகன்களில் ஒருவரது பெயர் சேகர் என்றும் கூறினார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இப்போது உலகின் மிக பெரிய பணக்காரர் எலான் மஸ்க் தான். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், நியூரோலிங்க் என ஏகப்பட்ட நிறுவனங்களை எலான் மஸ்க் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி, அதையும் இப்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கிடையே எலான் மஸ்க் பிரபல டிரேடிங் நிறுவனமான ஜெரோதா நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் மனம் திறந்து அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.

இந்திய வம்சாவளி
தனது நிறுவனங்கள் மற்றும் ஏஐ என பல விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார். மேலும், எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் பல விவகாரங்களைப் பகிர்ந்துள்ளார். தனது பார்ட்னர் ஷிவன் ஸிலிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். மேலும், தனது மகன்களில் ஒருவரின் நடுப் பெயர் "சேகர்" என்றும் கூறினார். இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் நினைவாக இந்தப் பெயரை எலான் மஸ்க் தம்பதி சூட்டியுள்ளது..
மகன் பெயர் சேகர்
இது தொடர்பாக எலான் மஸ்க் மேலும் கூறுகையில், "எனது பார்ட்னர் ஷிவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், எங்களது மகன்களில் ஒருவரின் நடுத்தரப் பெயர் சேகர். நோபல் விருது வென்ற சந்திரசேகரர் நினைவாக சேகர் என பெயர் வைத்தோம்.
எனது பார்ட்னர் ஸிலிஸ் குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டு கனடாவில் வளர்ந்தவர். அவரது தந்தை இந்தியாவில் இருந்து வந்த அமெரிக்க மாணவராக இருக்கும் என நினைக்கிறோம். எனக்கு சரியான விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அவர் தத்தெடுக்கப்பட்டு கனடாவில் தான் வளர்ந்தார்" என்றார்.
யார் அவர்
எலான் மஸ்கின் பார்டனர் ஸிலிஸ், அங்குள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் எலான் மஸ்கின் AI நிறுவனமான நியூரலிங்கில் கடந்த 2017-ல் சேர்ந்தார். இப்போது அவர் ஆபரேஷன் மற்றும் சிறப்புத் திட்டங்களின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். எலான் மஸ்க் ஸிலிஸ் தம்பதிக்கு ஸ்டிரைடர், அஸூர் என்ற இரட்டை மகன்கள், ஆர்காடியா என்ற மகள், மற்றும் செல்டன் லைகர்கஸ் என்ற மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்
இந்தப் பேட்டியில் அவர் அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்கள் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்தார். ஹெச்-1பி விசா திட்டத்தை முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் குரல்கள் எழுந்துள்ள நிலையில், அதை எலான் மஸ்க் திட்டவட்டமாக நிராகரித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "திறமையானவர்களுக்கு எப்போதுமே பற்றாக்குறை உள்ளது. இதை நான் எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். எனவே, திறமையான ஊழியர்கள் அதிகம் இருப்பது நல்லது தான். ஹெச்-1பி விசாவில் சில முறைகேடுகள் உள்ளது என்றாலும் அதைச் சரி செய்ய வேண்டுமே தவிர முழுமையாகத் தடை விதிக்கக்கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications