அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல்
டெல்லி: உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவை, இந்தியாவில் தொடங்குவதில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசு இந்தச் சேவைக்கான இறுதி அனுமதிகளைத் தற்போது நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX) நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்டார்லிங்க், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையத்தை வழங்குகிறது. இந்தியாவில் இந்தச் சேவையைத் தொடங்க அந்நிறுவனம் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு ஏஜென்சிகள், இதற்கான இறுதி அனுமதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளன.

என்ன காரணம்!
இந்திய அரசு இவ்வளவு எச்சரிக்கையாக இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.. மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரானில் ஸ்டார்லிங்க் பயன்படுத்தப்பட்ட விதம் தான் இந்தியாவை யோசிக்க வைத்துள்ளது.. ஈரானில் ஸ்டார்லிங்க் சேவைக்கு அதிகாரப்பூர்வ உரிமம் இல்லை. இருப்பினும், அங்கு நடந்த உள்நாட்டு மோதல்கள் மற்றும் போராட்டங்களின் போது ஸ்டார்லிங்க் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது இந்தியாவுக்கு ஒரு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் உரிமம் இல்லாமலேயே ஸ்டார்லிங்க் சேவையை வழங்க முடியும் என்றால், அது அந்த நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக முடியலாம் என்று இந்தியா கருதுகிறது. இதனால் இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிக்கள் ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன..
கேள்விகள்
அதாவது இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே போர் அல்லது அரசியல் பதற்றம் ஏற்படும் போது, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியுமா? வெளிநாட்டு அரசின் அழுத்தங்களுக்கு ஸ்டார்லிங்க் பணிய நேரிட்டால், இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை அந்த நிறுவனம் எப்படிப் பின்பற்றும்? இந்தியப் பயனாளர்களின் தகவல்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான டேட்டா கசியாமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது? ஆகிய முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
முதற்கட்ட அனுமதி
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே, இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கத் தேவையான 'GMPCS' என்ற உரிமத்தை ஸ்டார்லிங்க் பெற்றுவிட்டது. ஆனால், இது ஒரு ஆரம்பக்கட்ட அனுமதி மட்டுமே. வணிக ரீதியாகச் சேவையைத் தொடங்க வேண்டுமானால், உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதி மிக அவசியம். ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கனவே பல பாதுகாப்பு சோதனைகளைச் செய்து காட்டியிருந்தாலும், இந்திய அதிகாரிகள் இன்னும் கூடுதல் விளக்கங்களையும், பாதுகாப்பு உத்தரவாதங்களையும் கோரி வருகின்றனர்.
இந்தத் தாமதம் எலான் மஸ்க்கிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் தனது பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.75 டிரில்லியன் டாலர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்கு இந்தியா போன்ற ஒரு மிக பெரிய சந்தை மிகவும் அவசியம். இந்தியாவில் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அது அந்த நிறுவனத்தின் உலகளாவிய மதிப்பைப் பாதிக்கக்கூடும்.
சிக்கல்கள்
ஸ்டார்லிங்க் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த முட்டுக்கட்டையினால், இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை) விலை நிர்ணயம் செய்யும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவுத் திட்டத்தைத் தொலைத்தொடர்புத் துறை தயார் செய்துவிட்டாலும், பாதுகாப்பு அனுமதி கிடைக்காததால் அது இன்னும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை.
தற்போதைய நிலையில், இந்திய அரசு தனது நாட்டின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கிறது. ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதாக உறுதி அளிக்கும் வரை, இந்தியாவில் இந்தச் சேவை தொடங்குவது கேள்விக்குறியாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications