ஆம் ஆத்மியை முழுமையாக வளைக்கும் ED! கெஜ்ரிவாலை தொடர்ந்து மற்றொரு அமைச்சருக்கு குறி!
டெல்லி: சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், தற்போது டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டிடம் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். விரைவில் மேலும் ஒரு சில ஆம் ஆத்மி அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டெல்லி அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த சலசலப்புகள் ஓய்வதற்குள் தற்போது டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டிடம் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

டெல்லியின் உள்துறை, போக்குவரத்து மற்றும் சட்ட அமைச்சராக இவர் இருந்து வருகிறார். இவர் டெல்லிக்கான புதிய மதுபான கொள்கையை வரையறுத்ததிலும், அதில் நடந்த முறைகேட்டிலும் முக்கிய பங்காற்றியுள்ளதாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியுள்ளது. இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார். அவரிடம் 5 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து அவர் கூறுகையில், “கிட்டத்தட்ட 5.5 மணிநேரம் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் என்னை அழைத்தால் ஆஜராவேன்” என்று கூறியுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரமாக செல்போன் உரையாடல்களை அமலாக்தக்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் கெலாட் பயன்படுத்திய சிம் கார்டு மூன்று வெவ்வேறு செல்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருக்கிறது. எனவேதான் இவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
கெஜ்ரிவால் கைதில் யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.. உலக நாடுகளுக்கு ஜகதீப் தன்கர் பதிலடி
பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர்தான் கைது செய்யப்பட்டார். ஆனால், கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கும்போதே அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. இந்திய வரலாற்றில் முதலமைச்சர் யாரும் இதற்கு முன்னர் இப்படி கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலிருந்தும் விமர்சனங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications