அடுத்தடுத்து அதிரடி.. மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை விரைவில் "மணி லாண்டரி" வழக்கு பதிவு
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அதில் நடைபெற்றிருக்கும் பண மோசடி குறித்து விசாரிக்க அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது.
Recommended Video
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, டெல்லி பல்வேறு மதுபான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கைக்கு டெல்லி மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் இந்த புதிய கொள்கைக்கு டெல்லி அரசு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த சூழலில், புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ, முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேரின் பெயர்களை வழக்கில் சேர்த்தது.
இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையில், மதுபான உற்பத்தியாளர் ஒருவர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமாக இருக்கும் சிலரது நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் சட்டத்துக்கு புறம்பான வகையில் பணம் தந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். விடிய விடிய 15 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
இதனிடையே, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 13 பேருக்கு எதிராக சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸை இன்று பிறப்பித்தது. 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சிபிஐயிடம் இருந்து முதல் தகவல் அறிக்கையின் நகல், வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிசோடியா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கோப்புகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications