அனல் மின் நிலையங்களில் சல்பர் நீக்க சிஸ்டம் பொருத்துவதில் தளர்வு.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றும் புகையில் இருந்து சல்பரை அகற்றுவதற்கான எஃப்ஜிடி அமைப்புகளை பொருத்துவதில் தளர்வு வழங்கி மத்திய சுற்றுச்சூழல் - வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைச்சகம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

நம் நாட்டின் மின்சார தயாரிப்பில் அனல் மின் நிலையங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. நம் நாட்டுக்கான மின்சாரத்தில் 80 சதவீதம் அனல் மின் நிலையங்கள் மூலமாக தான் கிடைக்கிறது.
அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகளவில் அனல்மின் நிலையங்களில் இருந்து புகைகள் வெளியே வருகின்றன. இது சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது.
குறிப்பாக சல்பர் அதிகமாக வெளியேறி காற்றை நச்சாக்கி விடுகிறது. இதனை தடுக்க சல்பர் நீக்க சிஸ்டம்கள் பொருத்த அணல்மின் நிலையங்களுக்கு உத்தரவிட்டது. தற்போது அதில் திருத்தங்கள் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி அனல் மின் நிலையங்களில் மாசு உமிழ்வு தரத்தில் மாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுற்றுச்சூழல் - வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனல்மின் நிலையங்களுக்கான உமிழ்வு தரம் 2015ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி அனல்மின் நிலையங்களில் flue gas desulphurization (FGD) systems எனும் சல்பர் நீக்கம் செய்வதற்கான சிஸ்டம் பொருத்துவதில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தம் மூலம் நாட்டின் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களில் சுமார் 80 சதவீதம் வரை பயன்பெறும். அதேபோல் மாசு கட்டுப்பாட்டிற்கும் சிறந்த அணுகுமுறையாக இது இருக்கும்.
இந்த திருத்தப்பட்ட விதியின்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனல் மின் நிலையங்களில் மட்டுமே இனி சல்பர் நீக்க சிஸ்டம் கட்டாயாக இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் டெல்லி பிராந்தியத்தில் இது செயல்பாடடில் இருக்கும். மற்ற இடங்களில் இது தேவையில்லை. அதேவேளையில் மாசு அதிகமாக உள்ள நகரங்களில் இந்த விதி பொருந்தும். இதுதொடர்பாக மத்திய நிபுணர் குழு மதிப்பீடு செய்யும். அப்போது சல்பர் அதிகம் உள்ள இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தும் ஆலைகளுக்கும் இதனை கட்டாயமாக்க பரிந்துரை செய்யும்.
அதேபோல் நகரங்களுக்கு வெளியே சிறிய வகை ‛சி' ஆலைகளில் 1990ல் நிறுவப்பட்ட தற்போதுள்ள உயரமான புகை போக்கி விதிமுறைகள் உள்ளதால் அதற்கும் சல்பர் நீக்க சிஸ்டம் பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விதிகளில் திடீர் மாற்றம் செய்ய முக்கிய காரணம் சமீபத்திய ஆய்வுகள் தான். சமீபத்தில் டெல்லி ஐஐடி, சிஎஸ்ஐார்- என்இஇஆர்ஐ மற்றும் அட்வான்ஸ் ஸ்டடீஸ்க்கான தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. இந்த ஆய்வின்போது நம் நாட்டின் பல பிராந்தியங்களில் சல்பர் நீக்க சிஸ்டம் இல்லாமல் இருந்தாலும் கூட காற்றில் சல்பர் டை ஆக்சைட் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் மட்டுமே உள்ளது கண்டறியப்பட்டது.
மேலும் சல்பர் நீக்க சிஸ்டமை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட அளவுக்கு செலவு ஏற்படுகிறது. ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 25-30 பைசா வரை உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும். தற்போது இந்த விதியை தளர்த்துவதன் மூலமாக செலவு என்பது கணிசமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால் இந்த உத்தரவுக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள், ‛‛சல்பர் நீக்க சிஸ்டமை நீக்க செய்வது என்பது என்பது தூய்மையான காற்று கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். தற்போது மத்திய அரசின் இந்த முடிவு என்பது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நாடுகளில் சல்பர் நீக்க சிஸ்டம்கள் அனைத்து அனல் மின் நிலையங்களிலும் இருப்பது இல்லை. எங்கு தேவையோ அங்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்'' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications