நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் முகாமிட்டுள்ள சூழலில் டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோரும் நாளை அங்கு செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்.டி.ஏ கூட்டணி தொகுதிப் பங்கீடு விவகாரங்கள் டெல்லியில் அமித்ஷா உடனான சந்திப்பில் முடிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பச்சமுத்துவின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், கூட்டணிக்குள் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக 30 சீட்கள் கேட்பதால் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று இரவு சென்னை வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications