நீட், நெட் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகள்.. தடுக்க, இஸ்ரோ முன்னாள் தலைவர் தலைமையில் உயர்மட்ட குழு!
டெல்லி: சமீபத்தில் நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
நீட் தேர்வு குறித்து தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், தேசிய அளவில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள்தான். அதாவது, தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. 67 தேர்வர்கள், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் இப்படி நடந்ததில்லை. ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

எனவே நீட் தேர்வுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு பணம் பெற்றுக்கொண்டு நடத்தப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. சமீபத்திய தேர்வு முடிவுகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது என்று கூறி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் பீகாரில் நீட் தேர்வின் வினாத்தாள் லீக் ஆகியிருந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதாவது பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே வினாத்தாள் லீக்காகி இருக்கிறது. இதற்காக பெரும் தொகை கைமாறி இருக்கிறது என்பதையும் பல மாணவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல யுஜிசி நெட் தேர்வு முறைகேடு காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்வதற்கும் இளநிலை ஆராய்ச்சிக்கான நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
ஆனால் இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. நீட் முறைகேடு, அதனை தொடர்ந்து நெட் தேர்வு முறைகேடு என இரண்டு சம்பவங்கள் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியது.
இந்நிலையில் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, தேர்வுகள் வெளிப்படையாக மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழு 2 மாதங்களுக்குள் தனது அறிக்கையை மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். உறுப்பினர்களாக டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குல்ரியா, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜே.ராவ், சென்னை ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறையின் எமரிட்டஸ் பேராசிரியர் ராமமூர்த்தி, பீப்பிள் ஸ்ட்ராங்கின் இணை நிறுவனர் பங்கஜ் பன்சால், டெல்லி ஐஐடியின் மாணவர் விவகாரங்கள் துறை டீன் ஆதித்யா மிட்டல், கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
தேர்வுகள் வெளிப்படையாக, சுமுகமாக மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications