மத்திய அமைச்சரவை வரும் 5 ஆம் தேதி விரிவாக்கம்? கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க பாஜக திட்டம்?
டெல்லி: மத்திய அமைச்சரவை வரும் 5 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற விரும்புகிறது பாரதிய ஜனதா கட்சி. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதன் ஒரு படியாக கடந்த 23-ந் தேதி, பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின. ஒன்றாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்தன. எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும் தனது கூட்டணி பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம், விரைவில் நடக்கிறது. அக்கூட்டம், கூட்டணி பலத்தை காட்டுவதாக அமையும். அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சும் கொடி கட்டி பறக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக சேரும் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது, கூட்டணி கட்சிகளை சேர்ந்த பசுபதிகுமார் பராஸ், அனுப்ரியா படேல், ராம்தாஸ் அத்வாலே ஆகிய 3 பேர் மட்டும் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நேற்று முன்தினம் இரவு, டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தார். மத்திய அமைச்சரவையில் அவரது சிவசேனா கட்சி சேருவது பற்றி பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனிடையே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் வரும் 5 ஆம் தேதி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடர், 2023 ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை தொடரும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார். எனவே அதற்கு முன்பாக அமைச்சரவவையை விரிவாக்கம் செய்வதி பாஜக அரசு உறுதியாக உள்ளதாக தெரிகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications