Fact check: விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர்.. ஆபரேஷன் சிந்தூர் காரணமாக தாமதமாகிறதா?
டெல்லி: சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல இருக்கிறார். ஆனால் இதற்கான தேதி மாற்றப்பட்டிருக்கிறது. தேதி மாற்றப்பட்டதற்கு ஆபரேஷன் சிந்தூர்தான் காரணம் என்ற வதந்தி பரவி வருகிறது.
இந்தியா இதுவரை சொந்தமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது கிடையாது. இதற்காக 'மிஷன் ககன்யான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி 2027ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 3 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு போய் திரும்புவார்கள். இந்த பயணத்தை இஸ்ரோ செய்து முடிக்கும். அதாவது இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. இதற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். நான்கு பேர் கொண்ட குழுவின் தலைவராக சுபான்ஷு சுக்லா நியமிக்கப்பட்டிருக்கிறார். தவிர, பிரசாந்த் பி. நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் என மூன்று பேர் மிஷனில் இருக்கின்றனர். இதில் அஜித் கிருஷ்ணன் விமானப்படை வீரராவார்
முதற்கட்டமாக சுக்லா விண்வெளிக்கு பயணித்த அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ்-4 மிஷனில் இவர் சேர்க்கப்பட்டிருந்தார். மே.29ம் தேதி வாக்கில் இவர் பயணிக்க இருந்த விண்கலம் புறப்பட இருந்தது. ஆனால் தற்போது இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஜூன் 8ம் தேதி இந்த விண்கலம் புளோரிடாவிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அஜித் கிருஷ்ணன் விமானப்படைக்கு திரும்ப அழைக்கப்பட்டார். அவரை அழைத்ததுதான் சுக்லா விண்ணில் பறக்க தாமதம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது உண்மை கிடையாது. ஆக்ஸியம் மிஷன் ஏவுதலுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது. இதில், சில தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதை சரி செய்ய கால அவகாசம் தேவை. ஆகவேதான் மிஷன் லாஞ்ச் தேதி தள்ளி போயிருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கும், தேதி தள்ளி போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர்.
ஆக்ஸியம் மிஷன் வீரர்கள் க்ரூ டிராகன் விண்கலத்தில் பயணிக்கின்றனர். இந்த விண்கலத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்வெளிக்கு கொண்டு சேர்க்கிறது. சுக்லா உடன், மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் (அமெரிக்கா), சவோஸ் உஸ்னாஸ்கி-வினீவ்ஸ்கி (போலந்து) மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) என மொத்தம் 4 பேர் விண்வெளிக்கு போகின்றனர். இதில் சுக்லாவின் ரோல் மிஷன் பைலட். சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்கள் போகிறார்கள்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை சுக்லா இதன் மூலம் அடைவார். கடைசியாக கடந்த 1984ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றிருந்தார். அவருக்கு அடுத்து விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது வீரர் சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.
Fact Check:
வெளியான செய்தி:
ஆபரேஷன் சிந்தூர் காரணமாக இந்திய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்வது தாமதமாகிறது
முடிவு:
இந்திய விண்வெளி வீரர் செல்லும் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாமதத்திற்கும் ஆபரேஷன் சிந்தூருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ரேட்டிங்:
False












Click it and Unblock the Notifications