இந்திய அணி பயிற்சியாளர் மோடி? தோனி, அமித் ஷா அப்ளிகேஷன் போட்டாங்களா? மண்டையை பிச்சிக்கும் பிசிசிஐ..!
டெல்லி: கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டில் பதவிக்காலம் முடிவடையும், நிலையில் புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, தோனி, பெயரில் 3000 விண்ணப்பங்கள் வந்துள்ளது பிசிசிஐ-ஐ குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த இரு மாதங்களாக மையம் கொண்டிருந்த ஐபிஎல் புயல் ஓய்ந்திருக்கும் நிலையில் அடுத்ததாக டி20 உலகக் கோப்பைக்காக உலக அணிகள் தயராகி வருகிறது. பல நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடிய நிலையில், டி-20 உலகக் கோப்பை அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பிசிசிஐக்கும் புதிய தலைவலி உருவாகியிருக்கிறது. தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.
தலைமைப் பயிற்சியாளர்: டி-20 உலகக் கோப்பையுடன் ராகுல் இந்திய அணியில் இருந்து விடைபெறும் நிலையில் அடுத்த பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது. கம்பீர் அடுத்த பயிற்சியாளராக வர இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அவர் அதற்கு தயாராக உள்ளாரா என்பது கேள்விக்குரியாக இருக்கிறது. மேலும் தற்போது கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருக்கும் நிலையில், அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. இதனால் அவரை தக்க வைத்துக் கொள்ள ஷாருக் கான் ஆர்வம் காட்டி வருகிறார். கம்பீருக்கு அவர் ப்ளாங்க் செக் கொடுத்ததாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவின.
3000 விண்ணப்பங்கள்: இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. உலக அளவில் கலக்கிய பல முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ-க்கு சிக்கல் முளைத்துள்ளது. பொதுவாக 50 முதல் 100 விண்ணப்பிங்கள் வரை மட்டுமே வரும் நிலையில், கடந்த முறை 5000 விண்ணப்பங்கள் வந்தது. அதே போல் தற்போதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
போலி அப்ளிகேசன்: சில குறும்புக்காரர்கள் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, தோனி, பெயரில் 3000 விண்ணப்பங்களை அளித்துள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக நேற்று (27.05.2024) அறிவிக்கப்பட்டிருந்தது. கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்களை பெறுவோம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இதனை அடுத்து அந்த லிங்கை கண்டுபிடித்த நெட்டிசன்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக், ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர் போன்றோரது பெயர்களில் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
மோடி, அமித் ஷா: இது மட்டுமல்லாது தற்போது அரசியலில் மிகவும் பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோரது பெயர்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனரா என்பதைக் கண்டறிய முடியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்களை பெறும் போது அதனை எளிதாக கையாள முடியும் என்பதால் அதனை பயன்படுத்தியதாகவும், ஆனால் நெட்டிசன்கள் இப்படி செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கல் என்ன?: விண்ணப்பங்கள் பெறுவது ஒரு சாதாரண நடைமுறைதான் என்றாலும், தற்போது போலியான விண்ணப்பங்களால் உண்மையான விண்ணப்பதாரர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதை வைத்தே பயிற்சியாளரை தேர்வு செய்ய முடியாது எனவும் பிசிசிஐ தனியாக சில முன்னாள் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் அவர்கள் ஒருவர் இறுதி செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் எனவே தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications