கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு ஆதரவாக களமிறங்கும் விவசாயிகள்! ஜூன் 9இல் போராட்டம்
டெல்லி: கங்கனா ரணாவத்தை அறைந்த சிஐஎஸ்ஃஎப் பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகக் களமிறங்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். குல்விந்தர் கவுர் மீது தேவையற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை கங்கனா ரனாவத்.. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சை கருத்துகளைக் கூறி வந்துள்ளார். இதற்கிடையே இந்த லோக்சபா தேர்தலில் பாஜக அவருக்கு சீட் வழங்கியது.

இமாச்சல பிரேதேச மாநிலம் மாண்டி லோக்சபா தொகுதியில் அவர் களமிறங்கினார். இதில் 5.37 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 74,755 வாக்கு வித்தியாசத்தில் கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார்.
விமான நிலையத்தில் விழுந்த அறை: இதற்கிடையே நேற்றைய தினம் அவர் சண்டிகர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் வீரர் நடிகை கங்கனா ரனாவத்தை பளாரென அறைந்துள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத கங்கனா ரனாவத் மிரண்டு போனார். இந்தச் சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது கங்கனா ரனாவத்திடம் செய்தியாளர்கள் பல கேள்விகளைக் கேட்ட முற்பட்டனர். இருப்பினும், அதிர்ச்சியில் இருந்த அவர் எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. மேலும், செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே அவர் கிளம்பினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
யார் அவர்: கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் என்பது தெரிய வந்தது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குறித்துத் தரக்குறைவாகப் பேசியதாலேயே கங்கனா ரனாவத்தை அடித்ததாக அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குல்விந்தர் கவுர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து விசாரிக்கக் குழு ஒன்றையும் சிஐஎஸ்எஃப் அமைப்பு அமைத்துள்ளது.
என்ன காரணம்: இந்தச் சம்பவம் குறித்து குல்விந்தர் சிங் மேலும் கூறுகையில், "டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டு இருந்த போது அவர்கள் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவதாக கங்கனா ரனாவத் கூறியிருந்தார். அப்போது எனது அம்மாவும் டெல்லியில் போராடிக் கொண்டிருந்தார். விவசாயிகளை அவமதித்த கங்கனா ரனாவத் மீது எனக்கு கடும் கோபம் இருந்தது. இதன் காரணமாகவே அவரை அறைந்தேன்" என்று கூறியிருந்தார்.
விவசாய அமைப்புகள்: கங்னா ரனாவத்தை அறைந்த குல்விந்தர் சிங்கிற்கு ஆதரவாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். குல்விந்தர் கவுருக்கு எதிராகத் தேவையற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஜூன் 9ஆம் தேதி பஞ்சாபின் மொஹாலியில் இன்சாஃப் அதாவது நீதி பேரணியை நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. மேலும், விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட முக்கிய விவசாய அமைப்புக்கள் குல்விந்தர் கவுருக்கு நாதராகக் களமிறங்கியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ள அவர்கள், குல்விந்தரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications