நாளை முதல் டெல்லி சலோ பேரணி.. மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு.. விவசாயிகள் சொன்னது இதுதான்
டெல்லி: 5 ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகள் தங்களுக்கு சாதகமானதாக இல்லை என்று கூறி விவசாயிகள் நிராகரித்தனர். இந்த நிலையில், நாளை காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம் பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று கூறியுள்ளனர்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், விவசாயக கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி செல்வோம் (டெல்லி சலோ) என்ற பெயரில் பேரணியை தொடங்கினர்.

கடந்த 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட பேரணியில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை ஹரியானா எல்லையான ஷாம்பு, கானாரி ஆகிய இடங்களில் அந்த மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் விவசாயிகளால் டெல்லி நோக்கி செல்ல முடியவில்லை.
4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை: இதனால் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் அங்கேயே அமர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இரு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை வைத்து போலீசார், விவசாயிகளை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்தனர். அப்போது விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். இதில் விவசாயிகள் பலர் காயம் அடைந்தனர்.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகிய நிலையில், மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இதுவரை மூன்று முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நேற்று முன்தினம் இரவு 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் மத்திய அரசு தரப்பில் அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாய சங்க பிரதிநிதிகளும் பஞ்சாப் முதல்வர் பகவந்த மன்னும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று இருந்தனர்.
விவசாயிகள் நிராகரிப்பு: இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு சில முன்மொழிவுகளை அளித்தது. அதாவது, பருப்பு வகைகள், மக்கா சோளம், பருத்தி உள்ளிட்டவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் எனக் கூறியது. அதாவது விவசாயிகளின் பயிர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று பியூஷ் கோயல் கூறினார்.
மத்திய அரசு முன்வைத்த திட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க விவசாயிகள் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு இருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகள் விவசாயிகளுக்கு சாதகமானதாக இல்லை என்று போராடும் விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக நாளை காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம் பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications