டோல்கேட் ஆண்டு பாஸ்.. நாடு முழுக்க வாகன ஓட்டிகளுக்கு.. பறக்க போகும் மெசேஜ்.. வருது சூப்பர் வசதி
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) சுங்கச்சாவடிகளில் 'உள்ளூர் மாத பாஸ்' மற்றும் 'ஆண்டு பாஸ்' குறித்த தகவல்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்துமாறு தனது கள அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பயனாளர்களின் விழிப்புணர்வை அதிகரித்து, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த வசதிகள், அவற்றின் கட்டணங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைகள் குறித்து பயனாளிகள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. 'உள்ளூர் மாத பாஸ்' மற்றும் 'ஆண்டு பாஸ்' எப்படி வாங்குவது.. என்ன செய்வது.. எவ்வளவு கட்டணம் தர வேண்டும் என்று இதில் விளக்கப்பட்டு உள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த விவரங்கள் சுங்கச்சாவடி நுழைவாயில்கள், வாடிக்கையாளர் சேவைப் பகுதிகள் மற்றும் வெளியேறும் / நுழையும் இடங்களில் வைக்கப்படும்.
டோல்கேட் ஃபாஸ்டாக்
இந்தத் தகவல்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் தெளிவாக அச்சிடப்பட்ட பலகைகளில் காட்சிப்படுத்தப்படும். NHAI, தனது கட்டுப்பாட்டில் உள்ள கள அலுவலகங்களுக்கு, இத்தகைய பலகைகளை 30 நாட்களுக்குள் சுங்கச்சாவடிகளில் நிறுவுமாறும், பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகத் தெரியும் வகையிலும் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 'ராஜ்மார்க்கயாத்ரா' மொபைல் செயலியிலும், NHAI திட்டத்தின் இணையதளங்களிலும் இந்தத் தகவல்கள் பதிவேற்றப்படும். சுங்கச்சாவடியின் 20 கி.மீ (அல்லது பொருந்தும்) சுற்றளவிற்குள் வசிக்கும் தனிநபர்கள், ஆதார் அட்டை, வாகனப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இருப்பிட முகவரிச் சான்று போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து 'உள்ளூர் மாத பாஸ்'ஸைப் பெறலாம்.
ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, சுங்கச்சாவடி உதவி மையத்தில் இந்த மாத பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்தது. இதேபோல், கார், ஜீப் அல்லது வேன் போன்ற தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே 'ஆண்டு பாஸ்' வசதி உள்ளது. இது ஒரு வருட காலத்திற்கு அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வரை செல்லுபடியாகும்.
இந்த ஆண்டு பாஸ் 'ராஜ்மார்க்கயாத்ரா' செயலி மூலம் வாங்கலாம். ஒரே முறை ₹3,000 கட்டணம் செலுத்திய பிறகு, வாகனத்துடன் இணைக்கப்பட்ட செல்லுபடியாகும் FASTag-ல் இது டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு பாஸ் நாடு முழுவதும் சுமார் 1,150 தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செல்லுபடியாகும்.
ஃபாஸ்டாக்
2025 நவம்பர் 15 முதல், ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண விதிகள் அமலாகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
புதிய விதிகளின்படி, ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாக சுங்கக் கட்டணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறைகள் மூலம் பணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தில் 1.25 மடங்கு மட்டுமே வசூலிக்கப்படும்.
ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்கள்
முன்னதாக, ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாகவும், யுபிஐ மூலமாகவும் செலுத்தினாலும் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இந்தக் கொள்கை மாற்றம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உதாரணமாக, ஒரு சுங்கக் கட்டணம் ரூ. 100 எனில், ஃபாஸ்டாக் இல்லாத வாகனம் ரொக்கமாக ரூ. 200 செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐ மூலம் செலுத்தினால், ரூ. 125 மட்டுமே செலுத்தினால் போதும்.
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப்பதாகும். இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, பயணத்தை வேகமாகவும் சீராகவும் மாற்றும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
ரொக்கப் பணத்தை விட டிஜிட்டல் முறைகளுக்கு குறைவான கட்டணம் வசூலிப்பதன் மூலம், மக்களை ஃபாஸ்டாக் அல்லது யுபிஐ போன்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு மாற தூண்டுவது அரசின் திட்டமாகும். தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) (மூன்றாம் திருத்தம்) விதிகள், 2025, நாடு முழுவதும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும்.
இந்த புதிய விதி, சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்தும். ஃபாஸ்டாக் பயன்படுத்தாத ஓட்டுநர்கள், ரொக்கத்தை விட யுபிஐயை சிக்கனமான தெரிவாகக் காணலாம். இருப்பினும், ஃபாஸ்டாக் இப்போதும் மிகக் குறைந்த செலவில் வேகமான வழிமுறையாக உள்ளது. இந்த நடவடிக்கை, தொழில்நுட்ப அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூலையும், நெடுஞ்சாலைச் செயல்பாடுகளில் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்துகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications