இனச்சேர்க்கை வன்முறை.. திடீரென உயிரிழந்த பெண் சிவிங்கி புலி! 3 மாதத்தில் 3ஆவது சம்பவம்! என்ன நடந்தது
டெல்லி: ஆப்பிரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிவிங்கி புலி ஒன்று உயிரிழந்துள்ளது. இதன் மூலம் 3 மாதங்களில் மூன்றாவது சிவிங்கி புலி உயிரிழந்துள்ளது.
நம் நாட்டில் கட்டுப்பாடற்ற வேட்டை உள்ளிட்ட காரணங்களால் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை படுவேகமாக குறைந்து 1950களில் அழிந்தே விட்டது. ஒரு காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்த சிவிங்கி புலிகள் வேட்டை காரணமாக முற்றிலுமாக அழிந்தேவிட்டது.

அதைத் தொடர்ந்து சிவிங்கி புலிகளை மீண்டும் இந்தியாவில் கொண்டு வர பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடுகளில் இருந்து சிவிங்கி புலிகளை இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தனர். இதற்காகக் கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன.
சிவிங்கி புலி: பொதுவாக இதுபோல ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து வரப்படும் சிவிங்கி புலிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும். இதனிடையே தென்னாப்பிரிக்காவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்ட பெண் சிறுத்தை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சிவிங்கி புலி இனச்சேர்க்கையின் போது ஆண் சிவிங்கி புலியுடன் ஏற்பட்ட வன்முறையான தொடர்பு காரணமாக இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தக்ஷா என்று பெயரிடப்பட்ட இந்த சிவிங்கி புலி இதனால் உயிரிழந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் தேசிய பூங்காவில் உயிரிழக்கும் 3ஆவது சிவிங்கி புலி இதுவாகும்.
உயிரிழப்பு: தக்ஷாவை படுகாயமடைந்த நிலையில் கண்டறிந்த மருத்துவக் குழு அதற்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர். இருப்பினும் அது சில மணி நேரத்தில் உயிரிழந்துவிட்டது.
இது குறித்து மத்தியப் பிரதேச முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) ஜே.எஸ்.சௌஹான் கூறுகையில், "தக்ஷா என்ற பெண் சிவிங்கி புலியிடம் காணப்படும் காயங்களை ஆய்வு செய்தோம். அது இனச்சேர்க்கையின் போது, ஆண் சிவிங்கி புலியுடன் வன்முறையில் ஈடுபட்டதால் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இனச்சேர்க்கையின் போது பெண் சிவிங்கி புலிகள் மீது ஆண் சிவிங்கி புலிகள் வன்முறையில் ஈடுபடுவது அந்த விலங்குகளிடையே இயல்பாக நடப்பது தான். இதுபோன்ற சூழல்களில் கண்காணிப்புக் குழுவால் எதையும் செய்ய முடியாது" என்றார்.
என்ன காரணம்: தக்ஷா 1ஆம் எண் பகுதிக்குள் விடப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட வாயு மற்றும் அக்னி ஆகிய இரண்டு ஆண் சிவிங்கி புலிகள் 7ஆவது பகுதியில் இருந்த நிலையில், அவற்றை இனச்சேர்க்கைக்காக ஒரே இடத்தில் அனுமதிக்க ஏப்ரல் 30ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி 1 மற்றும் 7ஆம் பகுதிக்கு இடையேயான கதவு சமீபத்தில் தான் திறக்கப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து மொத்தம் 20 சிவிங்கி புலிகள் அழைத்து வரப்பட்ட நிலையில், இப்போது 17 மட்டுமே உயிருடன் உள்ளன. கடந்த 2 மாதங்களில் இரண்டு சிவிங்கி புலிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
3ஆவது சிவிங்கி புலி: முன்னதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் இருந்து குனோவிற்கு கொண்டு வரப்பட்ட உதய் என்ற சிவிங்கி புலி திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. அதேபோல கடந்த மார்ச் 27ஆம் தேதி சாஷா என்ற நபீபிய சிவிங்கி புலி சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சிவிங்கி புலிகளை மீட்டெடுக்கக் கடந்த செப். மாதம் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டது. அதேபோல கடந்த பிப். மாதம் 12 சிவிங்கி புலிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications