தினமும் 200 போன் கால்கள்.. வெப்ப அலையால் பற்றி எரியும் டெல்லி! திணறும் தீயணைப்புத் துறையினர்!
டெல்லி: வட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி தங்களுக்கு 200 போன் அழைப்புகள் வருவதாக டெல்லி தீயணைப்பு துறை தெரிவித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை பெய்தது. தமிழகத்தில் இயல்பை விட 22 சதவிகிதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை போதுமான அளவுக்கு பெய்திருக்கிறது. இதனால் கோடை காலத்தின் தாக்கம் பெரிய அளவில் உணரப்படவில்லை. ஆனால், வட மாநிலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.

டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் அதிகம். ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 7.5 டிகிரி அதிகம். குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் என வடமாநிலங்களில் வெயில் பொளந்து கட்டி வருகிறது.
சமீபத்தில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கத்தில் கனமழையை கொடுத்திருக்கிறது. இதற்காக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஈரப்பதமான மேகங்களை புயல் உறிஞ்சிக்கொண்டது. இதுவும் வடமாநிலங்களில் வெயில் அதிகரித்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தற்போது அரபிக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற் குறிப்பிட்ட மாநிலங்களில் மழை பொழிவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் தற்போது நிலவி வரும் வெப்ப அலை காரணமாக டெல்லியில் தீ விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 25ம் தேதி டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி முழுவதையும் புகை மண்டலமாக மாற்றியது. கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் 25ம் தேதி தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கட்டிடத்திலிருந்து 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிலருக்கு மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு தினமும் 200 போன் அழைப்புகள் வருவதாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த ஆண்டு தினமும் 160 அழைப்புகள் எங்களுக்கு வந்தன. இந்த ஆண்டு இது 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. தினமும் 200 போன் கால்களை நாங்கள் பெறுகிறோம். மே 26ம் தேதி வரை எங்களுக்கு 2,991 அழைப்புகள் வந்திருக்கின்றன. குளிர் காலத்தில் 70-80 அழைப்புகள்தான் வரும்.
ஏசியை அதிக அளவில் பயன்படுத்துவது, மின் வயர்களை சரி பார்க்காமல் இருப்பதுதான் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு காரணம். கோடை காலத்தில் 24 மணி நேரமும் ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் அதை தாங்கும் அளவுக்கு தரமான ஒயர்கள் இருப்பதில்லை. குடியிருப்பு பகுதிகளை தவிர, மருத்துவமனைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றிலும் தீ விபத்துக்கள் அதிகம் பதிவாகியுள்ளன" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications