ஓபிஎஸ் வெளிநடப்பு, பாட்டில் வீச்சு- கலகத்துக்கு காரணமான அதிமுக ஜூன் 23 பொதுக்குழுவில் நடந்தது என்ன?
அதிமுகவில் கலகத்துக்கு காரணமே கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு களேபரங்கள்தான்.
டெல்லி: அதிமுக யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுகவில் கலகத்துக்கு காரணமே கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு மோதல்தான்.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகளாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவுக்கு இரு கோஷ்டிகளும் உரிமை கோரி நிற்கின்றன.
அதிமுகவில் இந்த கலகத்துக்கு பிரதான காரணமாக இருந்தது கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடத்தப்பட்ட பொதுக்குழுதான். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தனர். இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் உச்சகட்டமாக உருவெடுத்து அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்கிற குரல் வலுத்தது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ந் தேதி நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கையெழுத்திட்டு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க மறுத்தது. பின்னர் திடீரென ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி இருந்தார் ஓபிஎஸ். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓபிஎஸ் மனுவை நிராகரித்திருந்தார். இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனு மீது நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் நடத்தினர். இவ்விசாரணை அதிகாலையில் முடிவடைந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதாவது ஜூன் 23 பொதுக்குழுவில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதனை ஓபிஎஸ் தரப்பு பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 23 அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மேடையில் அமர்ந்தனர். அப்போது தமிழ் மகன் உசேன், அதிமுக அவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுவதற்கு வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மைக்கை பிடுங்கி, அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சப்தமாக கத்தினார். அதேபோல கேபி முனுசாமியும் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாகவும் கூறினார். இதே கேபி முனுசாமி முன்னர் ஓபிஎஸ் அணியில் இருந்தார். அதிமுகவினருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செம்மலை வாசித்தார்.

அப்பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கும் போது, 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடனான ஒரு கடிதத்தை புதிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் சிவி சண்முகம் கொடுத்தார். இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து வலிமையாக போராட முடியவில்லை; அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்பதையே பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்; அந்த கையெழுத்துதான் தமிழ் மகன் உசேனிடம் கொடுக்கப்பட்டது என்றார் சிவி சண்முகம்.
பின்னர் பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ஜூலை 11ந் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். அப்போது ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன், இந்த பொதுக்குழு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினர். மேடையில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஓபிஎஸ் மீது கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைதான் தேவை என வலியுறுத்தி வேலுமணி உள்ளிட்டோர் பேசினர். இதுதான் அதிமுகவின் புதிய கலகத்துக்கு அடிப்படையாக அமைந்த 2021-ம் ஆண்டு ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள்.












Click it and Unblock the Notifications