இந்தியாவிலேயே முதல்முறை.. தமிழ்நாட்டின் கடற்கரையில அமையும் பிரம்மாண்ட திட்டம்..மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: இந்தியாவின் முதல் கடலோர காற்றாலை திட்டத்தை தமிழ்நாட்டின் கடல்பகுதியில் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 1,443 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 7,215 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான ஏல அறிவிப்பு செப்டம்ர் 28ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடலோர அல்லது கடல் காற்றாலை திட்டம் உலகம் முழுவதும் இப்போது அதிக அளவில் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலையில் சீனாவும், ஐரோப்பாவும் உலக அளவில் அதிக சந்தைகளை வைத்துள்ளன. ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க் நெதர்லாந்தில் இருக்கின்றன. இதுதவிர அமெரிக்கா (அட்லாண்டிக் கடற்கரை), ஜப்பான், தென்கொரியா , வியட்நாம் போன்றவையும் கடல் காற்றாலை சந்தையை கொண்டுள்ளன. இது தவிர துருக்கி, பிலிப்பைன்ஸ், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, இலங்கை, இந்தியாவும் கடல்வழி காற்றாலைக்கான ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை தீபகற்ப நாடு என்பதால், கடல்வளம் அதிக அளவில் உள்ளது.எனவே கடலோர காற்றாலைகள் அமைப்பது எளிது. இந்தியாவை பொறுத்தவரை, 36 ஜிகாவாட் கடலோர காற்றாலை ஆற்றல் திறன் குஜராத்தின் கடற்கரையிலும், கிட்டத்தட்ட 35 ஜிகாவாட் தமிழ்நாடு கடற்கரையிலும் உள்ளது என்று இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (NIWE) மதிப்பிட்டிருந்தது. கடலில் அல்லது கடலோரம் அமைக்கும் போது காற்று அதிகமாக வீசும் என்பதால் 100 சதவீதம் பயன்படும். தற்போதைய நிலையில், நிலப்பகுதிகளில் உள்ள காற்றாலைகள் ஆண்டு முழுவதும் பயன்படுவது இல்லை . ஆனால் கடல்பகுதியில் காற்று நன்றாக வீசும். எனவே 365 நாட்களும் 24 மணி நேரமும் மின் உற்பத்தித் திட்டம் செயல்பட்டால், அது 100% நேரம் பயன்படுத்தப்படும் என்ற நிலை உள்ளது.
அதேநேரம் கடலோர காற்றாலை ஆற்றலானது, இந்தியா அதிக தூய்மையான ஆற்றலை உற்பத்தி செய்ய உதவும் என்றாலும், கடலோர காற்றாலை மற்றும் சூரிய சக்தியை விட விலை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள சூழலில் கடற்கரை காற்றாலையின் சரியான விலை மற்றும் கட்டணத்தை கணிப்பது கடினமாகும். எனினும் கடலோர காற்றாலை திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மின் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் இந்தியா அதிக ஆர்வம் கொண்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் கடலோர காற்றுத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், நாட்டில் தற்போது நிலம் சார்ந்த காற்றாலைகள் மட்டுமே உள்ளன. இவற்றின் மூலம் 44,089.68 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நிலையில்லாதது ஆகும்.காற்று வீசும் காலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.ஆனால் கடல் காற்றாலை திட்டம் அப்படி இல்லை. நிறைய பயன்கள் உண்டு.
அந்த அடிப்படையில் இந்தியாவின் கடலோர காற்றாலை திட்டத்தை தமிழ்நாட்டின் கடல்பகுதியில் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1,443 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 7,215 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான ஏல அறிவிப்பு செப்டம்ர் 28ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. 2024ல், 4,140 மெகா வாட் மற்றும் 2024 - 25ல், 3,075 மெகா வாட் என, மொத்தம், 7,215 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, ஏழு மண்டலங்களில், 1,443 சதுர கி.மீ., கடல்படுகை குத்தகைக்கு விடப்பட இருக்கிறது.
முதலில் 5 ஆண்டுகளுக்கு கடல் பகுதிகள் மொத்தமாக குத்தகைக்கு விடப்படும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தம் நீடிக்கப்பட உள்ளதாம். கடலோர காற்றாலை ஆற்றல் திட்டத்திற்கான ஆய்வுகளை முதலில் ஆரம்பிக்கவும் அதன்பிறகு படிப்படியாகவும்செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மன்னர் வளைகுடா பகுதியில் கடல் காற்றாலை திட்டம் அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மின்சாரத்துறை அமைச்சகம், கடலில் காற்றாலை அமைப்பதற்கான திட்டத்தை 2032ம் ஆண்டுக்குள் அல்லது அதற்கு முன் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்காக கடல் காற்றாலை திட்டங்களை செயல்படுத்தும் டெவலப்பர்கள் அல்லது ஜெனரேட்டர்களுக்கான இன்டர்-ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் (ISTS) கட்டணங்களை தள்ளுபடி செய்யப்போவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் கடலோர காற்றாலை திட்டங்கள் பற்றிய ஆய்வுகள் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும், 2030-க்குப் பிறகுதான் செயல்பாட்டுத் திட்டம் வர வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலோர காற்றாலை விசையாழிகள் தயாரிப்பதற்கான மெட்ரீரியல்கள் இறக்குமதிக்கு வரிசலுகை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications