"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண்
டெல்லி: இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், இங்குள்ள சூழலைக் கண்டு கண்ணீர் வடித்துள்ளார். குடிசைகளில் வாழும் மக்கள், யாசகம் கேட்கும் குழந்தைகள் என இங்கு இருக்கும் சூழலைப் பார்த்தாலே அழுகை வருவதாகச் சொல்லியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோ பேசுபொருள் ஆகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவுக்குச் சுற்றுலா வருகிறார்கள். அதுபோல வருவோர் இந்தியாவைக் கண்டு ஆச்சரியப்படுவது உண்மை தான். இவ்வளவு பெரிய தேசம், பல கலாச்சாரம், பல மொழிகளைக் கொண்டு இருப்பதைக் கண்டு வியந்து போகிறார்கள்.

உலுக்கும் ஏழ்மை
அதேநேரம் இங்குப் பல பகுதிகளில் இருக்கும் ஏழ்மையும் கூட அவர்களை உலுக்குவதாகவே இருக்கிறது. அப்படி இந்தியாவுக்கு வந்த பெண் ஒருவர், இங்குள்ள சூழலைக் கண்டு கண்ணீர் விட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாகப் பரவி வருகிறது.
அதாவது அந்த பெண் பீகாரில் உள்ள புத்த கயாவிற்கு சென்றுள்ளார். அந்த வெளிநாட்டுப் பயணி, அங்குள்ள மகாவோதி கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் எல்லாம் அருமையாக இருந்தாலும் கூட, வெளியே இருக்கும் யதார்த்தமான வாழ்க்கைச் சூழலைக் கண்டு கண்ணீர் மல்கினார். அங்கு வசிக்கும் மக்களின் கடினமான வாழ்க்கையைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார்.
கண்ணீர்
இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த வீடியோவில், இது தொடர்பாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் நீண்ட காலமாகவே தாம் காண விரும்பிய மகாவோதி கோயிலில் நடைபெறும் ஒரு சமூக சேவை நிகழ்ச்சிக்குத் தன்னார்வத் தொண்டராகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் போதி மரத்தடியில் ஞானம் அடைந்த புனிதத்தலமாக மகாவோதி கோயில் திகழ்கிறது.
கோயிலும் கோயிலைச் சுற்றி இருக்கும் இடமும் அழகாகவும் அமைதியாகவும் இருக்கும் என்று தான் கருதியதாகவும் இருப்பினும் கோயிலைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதார நிலை தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "நான் தொண்டு நிகழ்ச்சிக்குத் தன்னார்வலராக வந்தேன். நீண்டநாள் கனவு நிறைவேறியது சிறப்பு. ஆனால் இங்கு என்னைச் சுற்றியுள்ள இந்த நிலைமையைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது. இங்கு வாழும் பலரின் கடினமான வாழ்க்கையை நம்பவே முடியவில்லை" என்றார்.
நடக்க கூட முடியல
வீடியோவின் ஒரு பகுதியில், கரடுமுரடான சாலையில் நடக்கச் சிரமப்பட்ட அவர், "என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. இங்குச் சாலை கூட சமமாக இல்லை. நடக்கவே அவ்வளவு கடினமாக இருக்கிறது" என்றார். மேலும், சாலை ஓரத்தில் அமைந்துள்ள குடிசைகள், ஆடையில்லாத குழந்தைகள், காலணி இல்லாமல் நடக்கும் குழந்தைகள் போன்ற காட்சிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். மேலும், சிறுமி ஒருவர் ஆபத்தான முறையில் கயிறு மீது நடந்து யாசகம் கேட்கும் வீடியோவையும் அவர் பகிர்ந்தார்.
யாசகம் கேட்கும் குழந்தைகள்
அவர் மேலும், "3 மற்றும் 4 வயதுக் குழந்தைகள் தெருக்களில் பிச்சை எடுப்பதைப் பார்க்க முடிகிறது.. பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் பள்ளியில் இல்லை. சத்துக் குறைபாடு உள்ள நபர்களை அதிகம் பார்க்க முடிகிறது. பழைய பொருட்களால் ஆன கூரைகள் என நான் பார்ப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. இதைப் பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால், இதுதான் இவர்களின் இயல்பான வாழ்க்கை முறையாக இருக்கிறது. நான் நிச்சயமாக சில விஷயங்களுக்கு உதவ முடியும். முடிந்த உதவியை நான் செய்வேன்" என்று அவர் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications