பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமா.. திடீரென டெல்லி சென்ற ஓ பன்னீர்செல்வம்.. பிளான் என்ன?
டெல்லி: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 15 ஆம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்போவதாக ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கடந்த ஜூலை மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார். தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க ஓ பன்னீர் செல்வம் நேரம் கேட்டு இருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடும் அப்செட் ஆன ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகல்
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ பன்னீர் செல்வம், அடுத்த கட்டமாக தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? அல்லது விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது எழுந்தது. இதற்கிடையே, டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதனால், ஓபிஎஸ் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மீட்க வியூகம் வகுத்து வருவதாக பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர் செல்வம், அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளது.
திருந்த வேண்டும்.. திருத்தப்படுவீர்கள்
வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம். எனவே டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள" என்று கூறியிருந்தார்.
டெல்லியில் ஓ பன்னீர்செல்வம்
இதனால் ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள சூழலில் திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு ஓ பன்னீர் செல்வம் டெல்லியில்தான் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த டெல்லி பயணத்தின் போது பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக
டிசம்பர் 15 ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்த சூழலில் தற்போது அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணிக்குள் ஓ பன்னீர் செல்வத்தை கொண்டு வரும் முயற்சி நடைபெறுகிறதா என்ற பேச்ச்சும் எழுந்துள்ளது. ஓ பன்னீர் செல்வம் சென்றுள்ள சூழலில் ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதகாக கூறப்படுகிறது.
இன்று மதியம் டெல்லி சென்றுள்ள குருமூர்த்தி வாயிலாக ஓ பன்னீர் செல்வம் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி அழைப்பின் பேரிலேயே ஓ பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளதகாவும் கூறப்படும் நிலையில் ஓரிரு நாட்களில், அவரது டெல்லி பயணம் எதற்காக என்பதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications