அன்று தெருவில் பிச்சை எடுத்த சிறுமி.. இன்று டாக்டர்.. பிங்கியின் வாழ்வில் நடந்த மேஜிக்
டெல்லி: ஹிமாச்சல் பிரதேசத்தின் மெக்லயோத்கன்ஸ் என்ற பிரபலமான சுற்றுலா தளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி ஹர்யானி என்ற பெண் சிறுமியாக இருக்கும் போது பிச்சை எடுத்து வந்தார். ஆனால் புத்தமத துறவியன் உதவியால் படித்த சிறுமி, படிப்பால் உயர்ந்து, மருத்துவராக பட்டம் பெற்றுள்ளார். எந்த இடத்தில் கையேந்தி யாசகம் பெற்றாரோ அதே நகரவாசிகளின் கைகளைப் பிடித்து இன்று மருத்துவம் பார்த்து வருகிறார்கள். கல்வி என்ன செய்யும் என்பவர்களுக்கு இது சிறந்த உதாரணம்.
2004 ஆம் ஆண்டில், திபெத்திய புத்தமத துறவியும், தர்மசாலாவைச் சேர்ந்த அறக்கட்டளையின் இயக்குநருமான லோப்சங் ஜம்யாங், ஹரியான் பிச்சை எடுப்பதைக் கண்டிருக்கிறார்.. அதை கண்ட அவர், சில நாட்களுக்குப் பிறகு, சரண் குத் என்ற இடத்தில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று அந்த சிறுமியை அடையாளம் கண்டார். அதன்பிறகு, சிறுமியின் பெற்றோரை சந்தித்தார். அப்போது சிறுமியை படிக்க அனுமதிக்குமாறு அப்பெண்ணின் தந்தை காஷ்மீரி லாலிடம் புத்தமத துறவு வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவர் வறுமை காரணமாக ஒப்புக் கொள்ளவில்லை.. எனினும் புத்த மத துறவி பல மணிநேரம் வற்புறுத்தி படிக்க வைக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். ஒருகட்டத்தில் தயங்கியபடி சிறுமியின் தந்தை, படிக்க வைக்க ஒப்புக்கொண்டார்.

குழந்தை பிங்கி ஹர்யானி தர்மசாலாவில் உள்ள தயானந்த் பப்ளிக் பள்ளியில் புத்தமத துறவியால் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டார். அங்கு அறக்கட்டளையால் அமைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் தங்கி படிக்க தொடங்கினார் பிங்கி. வீட்டையும் பெற்றோரையும் பிரிந்த பிங்கி, மெல்ல மெல்ல படிப்பில் கவனம் செலுத்தினார். நன்றாக படிக்க ஆரம்பித்த நிலையில், டாக்டர் ஆக விரும்பினார். இதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். நீட் தேர்வில் ஜெயித்த போதும், அவருக்கு அரசு கல்லூரியில் சேர முடியவில்லை. அதிகப்படியான கட்டணம் காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை..
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள டோங்-லென் அறக்கட்டளையின் உதவியுடன், அவர் 2018 இல் சீனாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். அங்கு எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தர்மஷாலாவுக்குத் திரும்பி இருக்கிறார். 20 வருடம் முன்பு எங்கு யாசகம் பெற்று வாழ்ந்தாரோ, அதே ஊரில் அச்சிறுமி டாக்டராக வந்துள்ளார். தன்னை போல் ஆதரவற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்பும் பிங்கி, அவர்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று லட்சித்துடன் பயணத்தை தொடங்கி உள்ளார்.
இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சிறுமி அளித்த பேட்டியில், "வறுமையால் எனக்கு சிறுவயதில் இருந்தே வாழ்க்கை என்பது மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. எனது குடும்பம் வறுமையால் மிகுந்த துயரத்தில் இருப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. நான் பள்ளியில் சேர்ந்தவுடன், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் ஏற்பட்டது. ஒரு குழந்தையாக, நான் ஒரு சேரியில் வாழ்ந்தேன், அதனால் எனது வாழ்க்கை பின்னணியே, படிக்க வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கியது. நான் ஒரு நல்ல நிலைய அடைய வேண்டும். நன்கு சம்பாதித்து பொருளாதார ரீதியாக முன்னேற விரும்பினேன் . நான்கு வயதில் பள்ளியில் சேரும் போதே நான், மருத்துவராக வேண்டும் என்று ஆசிரியரிடம் கூறியிருக்கிறேன்..
அந்த நேரத்தில், ஒரு மருத்துவர் என்ன வேலை செய்வார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் எப்போதுமே என்னுடைய சமூகத்திற்கு உதவ வேண்டும் என்றே விரும்பினேன்," என பிங்கி ஹரியான் கூறினார். சீனாவில் டாக்டருக்கு படித்து முடித்துள்ளதால், இந்தியாவில் மருத்துவப் பயிற்சி பெற, தகுதி தேர்வு எழுத வேண்டும். வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வுக்கு (FMGE) தற்போது பிங்கி தீவிரமாக தயாராகி வருகிறார். அதில் ஜெயித்தால், இந்தியாவில் டாக்டராக அவர் சேவை செய்ய முடியும்.
படிப்பு என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு பிங்கியின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். பிச்சை எடுப்பவரின் மகன் பிச்சை எடுக்க வேண்டும் என்றும், சலவை தொழிலாளி மகன் சலவை தொழிலே செய்ய வேண்டும் என்பதும், தூய்மை பணியாளராகவே தொடர வேண்டும் என்றும் ஒரு போதும் நினைக்கக்கூடாது.. குலத்தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று முடங்காமல், படித்து முன்னேறினால்,இந்த நாட்டில் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும். படிப்பு தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த சொத்து, படிக்காமல் முன்னேற முடியும் என்று யாராவது சொன்னால் ஒரு போதும் நம்பாதீர்கள்.. அசுரன் படத்தில் தனுஷ் சொல்வது போல், படிப்பு தான் யாராலும் திருட முடியாத சொத்து.












Click it and Unblock the Notifications